இங்கிலாந்தில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் தென்கிழக்கு இங்கிலாந்தில் குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே. பெண்ணாக பிறந்த இவர் இளம்வயதில் தனது உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால், தனது மன இயல்புக்கு தக்கவாறு முழுமைபெற்ற ஆணாக மாறிவிட தீர்மானித்தார். இதற்கான பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பிரிட்டன் நாட்டு அரசின் சுகாதார காப்புறுதி திட்டம் சுமார் 30 ஆயிரம் பவுண்டுகளை நிதி தர சம்மதித்தது. பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஹைடன் ராபர்ட் கிராஸ் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். தன்னை ஆணாகவே வைத்து கொள்ள தொடர்ந்து சிகிச்சைகள் பெற்று வந்தார். ஆனால், தனது கருப்பையை மட்டும் அவர் அகற்றிக் கொள்ளவில்லை.
சூப்பர் மார்க்கெட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த நிலையில், தனது கருப்பையில் வளரும் கருமுட்டைகளை, அதற்கான பாதுகாப்பு வங்கிகளில் சேமித்து தான் விரும்பியபோது குழந்தை பெற்றுகொள்ள ஹைடன் கிராஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது எதிர்கால திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக பிரிட்டன் அரசு சுகாதார காப்புறுதி திட்டத்தின் மூலம் கருமுட்டைகளை சேமித்து வைப்பதற்கான நிதியை இனி வழங்க இயலாது என்று அறிவித்துவிட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஹைட்ன் கிராஸ், தன்னால் இனி முழு ஆணாக மாறி, வேறொரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கலை நினைத்து கவலை கொண்டார். பெண்ணாகவே இருந்து உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கான யோசனையை நடைமுறைப்படுத்தினார். பேஸ்புக் மூலம் விந்து தானம் தொடர்பான வலைத்தளங்களில் மூழ்கி, ஒரு நபரை கண்டுபிடித்தார். அவரது விந்தணுவை தனது கருப்பையில் செலுத்திய பின்னர் தான் கருவுற்றிருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், ஹைடன் கிராஸ்-க்கு குளூசெஸ்ட்டர்ஷைர் ராயல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிரந்தது. தற்போது, மீண்டும் ஆணாகவே இருக்கப் போவதாக அறிவித்துள்ள இவர், தனது குழந்தைக்கு ஒரு வயதாகும்போது வேறு ஏதாவது வேலையில் சேர தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.