முதன்முதலில் தோன்றிய பிரபஞ்சத்தின் அதிசய தோற்றம் - வெளியிட்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

முதன்முதலில் தோன்றிய பிரபஞ்சத்தின் அதிசய தோற்றம் - வெளியிட்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
முதன்முதலில் தோன்றிய பிரபஞ்சத்தின் அதிசய தோற்றம் - வெளியிட்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
Published on

நமது பூமியை ஒரு அங்கமாக கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம் முதன்முதலில் உருவான போது, அதன் தோற்றம் எப்படி இருந்தது என்பதை 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி துல்லியமாக படம் எடுத்து சிலிர்ப்பூட்டும் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

பிரபஞ்ச ரகசியங்களை அவிழ்த்த ஹப்புல்

ஆதிகாலம் முதலாகவே வானவியல் பற்றிய ஆராய்ச்சி நம் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தந்த காலக்கட்டங்களில் ஏற்படும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, வானவியல் குறித்த புதுப்புது கண்டுபிடிப்புகளும், தகவல்களும் அவ்வப்போது வெளிவந்து மனிதக் குலத்தை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.

இதில் கடந்த 30 ஆண்டுகளாக நமது பிரபஞ்சம் குறித்தும், பால்வெளி அண்டம் குறித்தும் பலரும் அறியாத தகவல்கள் நமக்கு தெரியவந்தன. இதற்கு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த 1990-ம் ஆண்டு அனுப்பிய ஹப்புல் (Hubble Telescope) எனப்படும் ராட்சத தொலைநோக்கியே காரணம் ஆகும். இதுவரை விஞ்ஞானிகள் கூட அறிந்திடாத பால்வெளிக் கூட்டங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, வானவியல் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தியதில் ஹப்புல் தொலைநோக்கிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்று கூறினால் அது மிகையாகாது.

இதனிடையே, விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அந்த தொலைநோக்கியின் செயல்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி - வானவியலில் ஒரு புரட்சி

இதையடுத்து, பிரபஞ்சத்தை இன்னும் தெளிவாக ஆராயும் நோக்கில் 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை நாசா உருவாக்கியது. 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 7,950 கோடி) செலவிலும், 20 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கும் பிறகும் இந்த 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. மிக நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாசா விண்ணுக்கு அனுப்பியது. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் இந்த 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொலைநோக்கி அனுப்பப்பட்டதன் முக்கிய நோக்கம், இப்போதைய நமது பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக அல்ல. மாறாக, நமது பிரபஞ்சம் எப்படி உருவானது; அந்த சமயத்தில் பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பதை கண்டறியும் நோக்கிலேயே இந்த தொலைநோக்கி அனுப்பப்பட்டது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஒரு டைம் டிராவலர்!

பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிரபஞ்சத்தை, இப்போது அனுப்பிய தொலைநோக்கி எப்படி படம்பிடிக்கும்? என பலருக்கும் கேள்வி எழலாம். அதற்கான அறிவியல் விளக்கம் தெரிந்தால் இதுகுறித்து நல்ல தெளிவு நமக்கு கிடைத்துவிடும்.

அதாவது, நமக்கு மிக அருகே அமைந்திருக்கும் நட்சத்திரமான சூரியனில் இருந்து வெளியாகும் ஒளி, பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகிறது. அப்படியிருக்கையில், பல லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை வெளியிடும் ஒளியும் பல கோடி ஆண்டுகளாக அண்டவெளியில் பயணித்துக் கொண்டே இருக்கும். அந்த நட்சத்திரங்கள் அழிந்த பின்பும் கூட அதன் ஒளி பயணிக்கும். அப்படியென்றால், இன்று நாம் பார்க்கும் சில நட்சத்திரங்கள் கூட பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்தவையாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் அது வெளியிட்ட ஒளிதான் இப்போது நமது கண்களுக்கு புலப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு 'டைம் டிராவல்' கான்செப்ட் தான். வெறும் கண்களே இவ்வாறு 'டைம் டிராவல்' செய்யும் பொழுது, ஒரு ராட்சத தொலைநோக்கி எந்த அளவுக்கு 'டைம் டிராவல்' செய்யும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். இப்படிதான், 'ஜேம்ஸ் வெப்' தொலைோக்கி ஒரு டைம் டிராவலராக நமது அண்டசராசரம் எனப்படும் பிரபஞ்சத்தை படம்பிடித்து கொண்டிருக்கிறது.

சிலிர்க்க வைக்கும் புகைப்படம்!

அந்த வகையில், சமீபத்தில் தான் எடுத்த புகைப்படத்தை நாசாவுக்கு 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி தற்போது அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டார்.

சிகப்பு, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களில் ஒளிரும் பிரபஞ்சத்தின் இந்த புகைப்படத்தை பார்த்த நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் சமைந்துவிட்டனர். ஏனெனில், ஜேம்ஸ் வெப் அனுப்பியிருக்கும் புகைப்படமாகனது, சுமார் 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரபஞ்சத்தின் தோற்றம் ஆகும். அதாவது, பெரு வெடிப்புக்கு பிறகு நமது பிரபஞ்சம் உருவாகும் போது காணப்பட்ட அதன் தோற்றத்தை துல்லியமாக படம் எடுத்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, கரீனா நெபுல்லா (ராட்சத நட்சத்திர மண்டலம்), வாஸ்ப் 96 பி (நட்சத்திரக் கோள்), சதர்ன் ரிங் நெபுல்லா (நட்சத்திரத்தை சுற்றியுள்ள ஒளி) உள்ளிட்டவற்றை இந்தப் புகைப்படம் உள்ளடக்கியுள்ளதாக வியப்புடன் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த புகைப்படத்தை கொண்டே நமது பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை எளிதில் கணிக்க முடியும் எனக் கூறியுள்ள நாசா விஞ்ஞானிகள், இனி அடுத்தடுத்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பும் புகைப்படங்கள் பிரபஞ்சத்தை சுற்றியிருக்கும் ரகசியங்களை உடைத்துவிடும் என்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com