பிரான்ஸின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த செவ்வாய் அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் சிக்கியிருந்த சிறுவர்கள் இருவர், அதிலிருந்து தப்பிப்பதற்காக சாலையில் குழுமியிருந்த மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
அவர்களுக்கு உதவ அனைவரும் முன்வந்ததால் சுமார் 33 அடி உயரம் கொண்ட மாடியிலிருந்து அவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக குதித்து உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் இருவரும் மாடியிலிருந்து குதித்து தப்பிக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
சிறுவர்களை கைகளில் ஏந்திப் பிடித்தவர்களில் ஒருவரான வாலிட் பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்தது “சிறுவர்கள் இருவரும் காப்பாற்றுங்கள் என எங்களிடம் உதவி கேட்டனர். அவர்கள் இருந்த வீடு முழுவதும் தீ பிடித்து கரும் புகை வெளியேறிக் கொண்டிருந்தது. அவர்களது வீட்டின் கதவை உடைத்து காப்பாற்ற நினைத்தோம். ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த சிறுவர்களில் ஒருவன் நாங்கள் ஜன்னலிலிருந்து குதிக்கிறோம். தாங்கி பிடித்துக் கொள்ளுங்கள் என சொல்லி ஒவ்வொருவராக குதித்தனர். நாங்கள் எல்லோரும் அப்படியே கைகளால் அவர்களை பிடித்தோம். குதித்ததில் அவர்கள் இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனக்கு மட்டும் கை மூட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது” என தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் இருவரும் சகோதரர்கள் என பிரான்ஸ் நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது. மக்களின் இந்த செயலுக்கு கிரெனோபில் நகரின் மேயர் எரிக் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.