டென்மார்க் அணியின் ஜெர்சியில் HUMAN RIGHTS FOR ALL என்ற வாசகத்தை பயன்படுத்தக்கூடாது என FIFA டென்மார்க் கால்பந்து கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.
உலகம் முழுக்க அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக பார்க்கப்படுவது கால்பந்து. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற வீரர்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற வீரர்களாக திகழ்கிறார்கள். கால்பந்து விளையாட்டில் முக்கியமானதாக பார்க்கப்படுவது உலகக்கோப்பை தொடர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. கடந்த முறை 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் நடைபெறவுள்ளது.
கத்தாரில் நடத்த எதிர்ப்பு ஏன்?
கத்தாரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு இரண்டு விதங்களில் எதிர்ப்பு வருகிறது. ஒன்று தன்பாலின விவகாரத்தில் கத்தார் அரசு காட்டும் கடுமையான எதிர்ப்பு, மற்றொன்று மைதான கட்டமைப்பு பணிகளில் தொழிலாளர்கள் நிலை குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்.
கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை நடைபெறுவதை எதிர்த்து தொடர்ந்து குரல்கள் எழுந்து வரும் சூழலில், கத்தார் நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை எதிர்க்கும் விதமாக டென்மார்க் அணி தங்களுடைய பயிற்சி ஆடைகளில் HUMAN RIGHTS FOR ALL என்ற வசனம் இடம்பெறும் என தெரிவித்து இருந்தனர்.
அதேபோல கத்தார் நாட்டில் கால்பந்து மைதானங்கள் அமைக்கும் பணியில் உயிரிழந்த நபர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கருப்பு நிற ஜெர்சி அணியவும் டென்மார்க் அணியினர் திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் தான் உலகக் கோப்பை நடைபெறும் நேரத்தில் இதுபோன்று அணிகள் தொடர்ந்து ஈடுபடும் எனில், அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உள்ளது.
இதனால் அரசியல் பதிவுகள் எதுவும் ஜெர்சியில் இடம் பெறக்கூடாது என்பதால், டென்மார்க் அணியின் ஜெர்சியில் HUMAN RIGHTS FOR ALL என்ற வாசகத்தை பயன்படுத்தகூடாது என FIFA டென்மார்க் கால்பந்து கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
எத்தனை அணிகள்? எப்படி நடைபெறும்?
அமெரிக்கா, மெக்ஸிகோ, கன்னடா, கேமரூன், மொரோக்கோ, துனிசியா, செனகள், கானா, உருகுவே, ஈக்வடார், அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுக்கல், போலந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, செர்பியா, ஸ்பெயின், குரோசியா, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, ஜப்பான், சவுதி அரேபியா, தென்கொரியா, ஈரான், கத்தார், வேல்ஸ், கோஸ்டா ரிகா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும்.
இதனையடுத்து 32 அணிகளும், 4 அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்படும். அதன்படி,
குழு ஏ : நெதர்லாந்து, செனகல், ஈக்வடார், கத்தார்
குழு பி : இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குழு சி : போலந்து, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, சவுதி அரேபியா
குழு டி : துனிசியா, டென்மார்க், ஆஸ்திரேலியா, பிரான்ஸ்
குழு இ : ஜப்பான், ஜெர்மனி, கோஸ்டா ரிகா, ஸ்பெயின்
குழு எஃப் : பெல்ஜியம், கனடா, மொரக்கோ, குரோயேஷியா
குழு ஜி : கேமரூன், சுவிட்சர்லாந்து, பிரேசில், செர்பியா
குழு எச் : கொரிய குடியரசு, உருகுவே, கானா, போர்ச்சுக்கல்.. ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
போட்டி நடைபெறும் தேதிகள்:
நவம்பர் 20 தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி வரை குரூப் சுற்றுகள் நடைபெறும். 12 நாட்கள் நடைபெறும் குரூப் சுற்றுப் போட்டிகளின் போது, 1 நாளைக்கு 4 போட்டிகள் நடைபெறும். குரூப் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். டிசம்பர் 3 முதல் 6 வரை காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளும், டிசம்பர் 14 மற்றும் 15 இல் கால் இறுதிச் சுற்றுகளும் நடைபெறவுள்ளன. டிசம்பர் 18-ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.
இந்திய நேரப்படி எப்போது போட்டிகள்?
இந்திய நேரப்படி மாலை குரூப் போட்டிகள் மாலை 3:30 மற்றும் 6:30 மணிக்கும், காலிறுதிக்கு முந்தைய சுற்று இரவு 8:30 மற்றும் 10.30 மணிக்கும், அரை இறுதிப் போட்டிகள் இரவு 10:30 மணிக்கும், இறுதிப்போட்டி இரவு 8:30 மணிக்கு தொடங்கும்.