ஜப்பானில் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தைப் பெண் ஒருவர் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ நகரிலுள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருபவர் 48 வயதான யூமி யோஷினோ. இவர் முறையாக வாடகை செலுத்துவில்லை என்ற காரணத்திற்காக குடியிருப்பிலிருந்து சில வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார்.
சில நாட்களுக்கு முன், அந்த பெண் தாங்கிவந்த வீட்டை சுத்தம் செய்ய பணியாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த ஃப்ரீசர் பாக்ஸை திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஃப்ரீசரை திறந்ததும் உறைந்துபோன நிலையில் மனித சடலம் ஒன்று உருக்குலைந்து இருப்பதை பார்த்து அலறினார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் ஃப்ரீசரில் இருந்த சடலம் யூமி யோஷினோவின் தாயார் என்று அடையாளம் காணப்பட்டது. தனது தாயாரின் பெயரிலேயே வீடு இருந்ததாகவும், அவர் உயிரிழந்தது தெரிந்தால், பிளாட்டை காலி செய்ய சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சடலத்தை ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்ததாக யூமி யோஷினோ கூறினார்.
பல ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்ததால் பிரேத பரிசோதனையில் யூமி யோஷினோவின் தாய் எதனால் இறந்தார் என்பது குறித்து கண்டறிய முடியவில்லை என்றும் இருப்பினும், உயிரிழந்தபோது அவருக்கு சுமார் 60 வயது இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.