சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுள்ளார் இந்திய மாணவி மயூஷி பகத். நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த மயூஷி பகத், அங்குள்ள நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2019 ஏப்ரல் 29ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியேறிய மயூஷி பகத், அதன்பிறகு வீடு திரும்பவில்லை எனவும், அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அதே ஆண்டு மே 1ஆம் தேதி மயூஷி பகத்தை காணவில்லை என போலீஸில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீஸாரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் மயூஷி பகத் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் அமெரிக்க புலனாய்வு அமைப்பு (FBI) அவரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்தது.
இந்த நிலையில் காணாமல்போன மாணவி மயூஷ் பகத்தை கண்டுபிடிக்க, அமெரிக்க புலனாய்வு அமைப்பு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மாணவி மயூஷி இருப்பிடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் (இந்திய மதிப்பில் ரூ. 8.33 லட்சம்) அமெரிக்க டாலர் சன்மானமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
மயூஷி பகத் குறித்த தகவல் தெரிந்தவர்கள் FBIக்கோ அல்லது ஜெர்சி நகர காவல் துறைக்கோ தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மயூஷி பகத், கருப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்களைக் கொண்டவர் என்றும் அவரது உயரம் 5'10 என்றும், ஆங்கிலம், இந்தி, உருது பேசுவார் எனவும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI தெரிவித்துள்ளது. இந்திய மாணவி மாயமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும், அவரை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறிவருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: “கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை ரத்து” - கர்நாடக முதல்வர் சித்தராமையா