தந்தையின் அன்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பதை மெய்ப்பிக்கும் நெகிழ்ச்சி சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.
விவாகரத்து பெருகி வரும் இக்காலத்தில் சில நேரங்களில் குழந்தைகள் தாயிடமோ, அல்லது தந்தையிடமோ வளர்க்கப்படும் சூழல் உண்டாகிறது. அப்படி வளரும் குழந்தைகள் தங்களுக்கு கிடைக்காத தாயன்பு அல்லது தந்தையின் பாசத்திற்காக ஏங்கும். இதனால் குழந்தைகளுக்கு மனரீதியிலான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள் படிப்பு மற்றும் விளையாட்டிலும் கூட தங்களது முழுக் கவனத்தை செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதும் உண்டு.
இந்நிலையில் தனது மகனுக்காக தந்தை செய்த காரியம் அனைவரின் கண்களிலும் நெகிழ்ச்சியுடன் கண்ணீரை வரவழைக்கிறது. தாய்லாந்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை போற்றும் விதமாக இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்லாந்தை சேர்ந்தவர் பணுதாய். மனைவியுடன் விவாகரத்து பெற்று தனது 5 வயது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.
பணுதாய் மகன் படித்து வரும் பள்ளியிலும் அன்னையர் தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. அப்போது அனைத்து அம்மாக்களும் தங்களது குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்று அருகில் இருந்தனர். தனது மகனுக்கு தாய் குறித்த ஏக்கம் வந்துவிடக் கூடாது என்று நினைத்த பணுதாய், தனது ஆண் உடையை மாற்றி பெண்கள் அணியும் உடையை அணிந்து தாயாக மாறி தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்றார். பொதுவாக எந்தவொரு ஆணும் பெண்கள் அணியும் உடைகளை அணிய விரும்பமாட்டார்கள். ஆனால் மகனுக்கு அம்மாவின் ஏக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக எந்தவொரு ஆணும் செய்த துணியாத காரியத்தை செய்துள்ளார் பணுதாய். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உருகி இது உண்மையான தந்தையின் பாசத்தை காட்டுவதாக ஷேர் செய்து வருகின்றனர்.