ஜெர்மனியின் ஹன்னோவருக்கு அடுத்த ஸ்பிரிங்க் நகரைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது ஒரு வயது மகளின் காலில் பாதரச ஊசியைச் செலுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்தக் குழந்தை பிறந்த பிறகு, அவரது தாய், இருவரையும் விட்டுச் சென்றுள்ளார். இதனால் பழிவாங்க நினைத்துள்ளார் அந்தக் குழந்தையின் தந்தை. இதற்காக அவரது புது காதலியுடன் இணைந்து அந்தக் குழந்தையின் காலில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாதரச ஊசியைச் செலுத்தியுள்ளார். இந்த ஊசியைச் செலுத்தியபின்பு, அந்தக் குழந்தைக்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன. பின்னர், அந்தக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், இதற்கு என்ன காரணம் என மருத்துவர்களால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லையாம். மூன்று அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகே, அந்தக் குழந்தையின் உடலில் பாதரசம் செலுத்தப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குழந்தை உடலில் பாதரசத்தை ஏற்றியதை முதலில் அவர்கள் மறுத்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டுள்ளனர். “பாதரசத்தை ஏற்றுவதால் உடனடியாக உயிர் போகாது என்பது தங்களுக்குத் தெரியும் என்றும், அந்தக் குழந்தைக்கு மரண வலியை ஏற்படுத்தவே தாங்கள் அப்படிச் செய்தோம்” என இருவரும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்தக் குழந்தையின் தந்தைக்கு 13 ஆண்டுகளும், அவரது புது காதலிக்கு 12 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மானிய நாட்டு தனியுரிமை கொள்கையின்படி, இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை நீதிமன்றம் அறிவிக்கவில்லை. இந்தச் சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.