அமெரிக்காவின் டெக்சாஸ் கடற்கரையில் ஹார்வி புயலுக்குப் பிறகு ஒதுங்கிய, வித்தியாசமான கடல் உயிரினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
ப்ரீத்தி தேசாய் என்பவர், இந்த உயிரினத்தை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இது என்ன உயிரினம் என்பதை யாராவது சொல்ல முடியுமா?’ என்று கேட்டறிந்தார். புயல் சேதங்களை கடற்கரையில் ஆய்வு செய்துவருபவர் இவர். ’ இது, வழக்கமாக கடற்கரையில் பார்க்கிற உயிரினம் அல்ல. ஆழ்கடலில் இருந்து கரைக்கு அடித்துவரப்பட்ட ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த டிவிட், உயிரியலாளரும் விலாங்கு மீன் ஆய்வாளருமான டாக்டர் கென்னத் டிகே என்பவருக்கு அனுப்பப்பட்டது. அவர், இதை ’கோரைப்பல் கொண்ட பாம்பு விலாங்கு’ என்று தான் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது, மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில், 30 முதல் 90 மீட்டர் வரையுள்ள ஆழத்தில் காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.