பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த அமீர் அலி - குதேஜா என்ற தம்பதிக்கு 19-30 வயது வரையுள்ள 7 குழந்தைகள் உள்ளனர். தாய் தந்தையுடன் சேர்த்து, குடும்ப்பத்தில் மொத்தம் 9 பேர். 7 பிள்ளைகளில் 4 பேர், இரட்டையர்கள். அதாவது ஒரு பிரசவத்தின்போது இரட்டை ஆண் குழந்தைகளையும், இன்னொரு பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர் அத்தம்பதி. இப்படி பிறந்த 7 குழந்தைகளும் ஒரே தேதியில் பிறந்ததுதான் ஆச்சர்யம்.
இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த அம்மா அப்பாவுக்கும்கூட அதேநாள்தான் பிறந்தநாளாம். அமீர் அலி, குதேஜா தம்பதிக்கு, கடந்த 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நாள்தான், தம்பதி மற்றும் ஏழு குழந்தைகளின் பிறந்த நாளுமென்பது கூடுதல் சுவாரஸ்யம்!
1991-ல் திருமணம் செய்துகொண்ட அத்தம்பதி, சரியாக ஓராண்டு கடந்தபின், 1992ஆம் ஆண்டு அதே ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி சிந்து என்ற பெண் குழந்தையை பெற்றுள்ளனர். பின் 2003ஆம் ஆண்டு அதே ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அதன்பின் ஏறத்தாழ 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அதே தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களும் இதே ஆகஸ்ட் 1ஆம் தேதியில் பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதிக்கு ஒட்டுமொத்தமாகப் பிறந்த 7 குழந்தைகளும் முன்கூட்டியோ அல்லது அறுவைச்சிகிச்சை மூலமாகவோ பிறக்கவில்லை. அனைத்தும் அதே தேதியில் சுகப்பிரசவத்தில் பிறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் இதேநாளில் ஒன்றாய்ப் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்தச் சாதனையால் அமீர் அலி - குதேஜா குடும்பத்தினர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளனர்.
முன்னதாக 1952 மற்றும் 1966ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்த கம்மின்ஸ் குடும்பத்தின் ஐந்து குழந்தைகள் இந்தச் சாதனை பிரிவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து இருந்தனர். தற்போது கம்மின்ஸ் குடும்பத்தின் சாதனை முறியடிக்கப்பட்டு, அமீர் அலி குடும்பம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.
இதுகுறித்து அமீர் அலி, “இது எல்லாம் இயற்கையாகவே நடந்தது. கடவுள் கொடுத்த பரிசு. எங்கள் குழந்தைகள் ஒரே நாளில் பிறக்க வேண்டும் என்று வேண்டுமென்றே திட்டமிடவில்லை” என்றுள்ளார்.