பாம்புகளோடு கொஞ்சி விளையாடும் மலேசிய பாம்பு காதலர், விஷப் பாம்பு கடித்து பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்தவர், அபு ஜரின் ஹுசைன் (33). அங்குள்ள தீயணைப்புத் துறையில் பணியாற்றும் இவர், பாம்பு காதலர். எங்கு பாம்பு என்றாலும் ஆர்வமாகப் போய் பிடிப்பவர். ஏராளமான பாம்புகளைப் பிடித்துள்ள ஹூசைன், மலேசியாவில் இதற்காகவே பிரபலமானவர். பாம்புகளோடு செல்ஃபி கூட எடுத்துள்ள இவர், தான் பிடித்த விஷப் பாம்புகளை ஆய்வுக்காக வீட்டில் வளர்ப்பதும் வழக்கம். பிறகு சில மாதங்கள் கழித்து அதைக் காட்டுக்குள் விட்டுவிடுவார். பலமுறை விஷப்பாம்புகள் அவரை கடித்துள்ளன. 2015-ம் ஆண்டு பாம்பு கடித்து 2 நாள் கோமோ நிலையில் கூட இருந்துள்ளார்.
இந்நிலையில் பெண்டாங் பகுதியில் பாம்பு பிடிக்கும் பணியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது விஷப்பாம்பு ஒன்று அவரை எதிர்பாரதவிதமாகக் கடித்தது. திடீரென மயக்கமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.
ஏராளமான விஷப் பாம்புகளைப் பிடித்துள்ள அவர், பாம்பு கடித்து பலியானது, மலேசிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.