பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது பற்கள் இல்லாமல்தான் பிறப்பார்கள். வயது ஆக ஆக ஊட்டச்சத்துக்களைப் பொருத்து பற்கள் முளைத்து வளர்வது இயல்பாக இருக்கும். பால் பல்லில் தொடங்கி கடினமான கடவாய் பல் வரை ஒருவருக்கு 32 பற்களும் வளர 21 வயதுக்கு மேல் ஆகும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவும் இப்போதைய காலகட்டத்தில் சிலருக்கு 21 வயதை கடந்த பின்னரும் கடவாய் பற்கள் முளைப்பதில்லை. ஆனால், சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், 32 பற்களோடு குழந்தை பிறந்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு பிறக்கும்போதே 32 பற்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார். கைக்குழந்தையாக இருக்கும் அக்குழந்தைக்கு அடுக்கி வைத்தார்போல 32 பற்களும் இருக்கின்றன.
சிரித்தால் அழகாக பற்கள் தெரியும்படி புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வீடியோவில், விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார் அந்தப் பெண். இந்த வீடியோ சுமார் 30 லட்சம் பார்வைகளை கடந்துள்ள நிலையில், எப்படி சாத்தியமானது என்று இணையவாசிகள் வியந்துபோயுள்ளனர்.
பிறக்கும்போது குழந்தைகளுக்கு பற்கள் இருக்காது என்றாலும், சில குழந்தைகளுக்கு கீழ் வரிசையில் Natal teeth எனப்படும் பற்கள் இருக்கும். இவை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எடுக்கப்படுவதும் உண்டு. ஆனால், 32 பற்களோடு குழந்தை எப்படி பிறந்திருக்க முடியும் என்ற கேள்வியை மருத்துவரிடம் முன்வைத்தோம்.
விளக்கமளித்த மருத்துவர் பத்மாவதி, ‘ஒரு சில குழந்தைகளுக்கு பிறக்கும்போது 2 பற்கள் இருக்கும். அதுவே அரிதுதான். அதைவிட அரிதாக அரிசி போன்ற வடிவதில்லை 2க்கும் மேற்பட்ட பற்களோடும் குழந்தைகள் பிறப்பதுண்டு.
அவை குழந்தை மற்றும் தாயின் நலன் கருதி எடுக்கப்படுவதுண்டு. ஏனெனில் இதுபோன்ற பற்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது சிக்கலாக இருப்பதோடு, உடைந்த பிறகு அதை குழந்தை விழுங்கிவிட்டாலும் பெரிய சிக்கல்தான். ஆனால், இந்த அளவுக்கு வரிசைகளோடு குழந்தைகள் பிறப்பதில்லை. முழுக்க முழுக்க Fake Video வாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். natal teeth எனப்படும் பற்களும் பிறக்கும் 3,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்குதான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.