அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மோடி கடந்த 20ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் கடந்த 21ஆம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். பின்னர் மறுநாளான ஜூன் 22ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அன்றைய விருந்து நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதற்கிடையே ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
புகழ்பெற்ற ‘நியூ யார்க் டைம்ஸ்’ என்ற நாளிதழின் முகப்புப்படம் போல சித்தரிக்கப்பட்டுள்ள இதில், ‘இந்தப் பூமியின் சிறந்த கடைசி நம்பிக்கை’ என்கிற வசனமும், ‘உலகின் ஆளுமைமிக்க, அதிகம் பேரால் நேசிக்கப்படும் ஒரு தலைவர்... இங்கு நம்மை ஆசிர்வதிக்க உள்ளார்’ (அமெரிக்க பயணத்தை குறிப்பிடுவதை போல) என்ற கருத்தாக்கத்திலான வரிகளும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றபோதுகூட இந்தப் புகைப்படம் வைரலானது. இந்நிலையில், தற்போதும் இந்தப் புகைப்படம் மீண்டும் வைரலாகிறது. பாஜக-வை சேர்ந்த சிலரும்கூட இதை இப்போதும் பதிவிடுவதாக தெரிகிறது. ஆகவே இது உண்மையா என ஆராய்ந்தோம்.
அப்போது இப்படம் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.
கடந்த 2021-ல் இப்படம் வைரலானபோதே, இப்படம் போலியென நியூயார்க் டைம்ஸ் தரப்பே விளக்கம் கூறியது. அதை வைத்தே, இப்புகைப்படம் போலியென உறுதிசெய்துள்ளோம். நியூயார்க் டைம்ஸின் குறிப்பிட்ட அந்த விளக்கம், இங்கே: