போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் பார்வையிட்ட சில மணிநேரங்களிலேயே அந்நாட்டின் தலைநகர் உக்ரைனில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதலை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்து போய்விட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த சூழலில், போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் நேற்று நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவர், "மிகக் கொடூரமான வலிகளையும், உணர்வுகளையும் உக்ரைன் தாங்கி நிற்கிறது" எனக் கூறினார். இதனிடையே, உக்ரைன் தலைநகரான கீவ்வுக்கு அருகே உள்ள பகுதியை குட்டெரெஸ் பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே, அவர் இருந்த இடத்துக்கு சற்று தொலைவில் ரஷ்யா வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைநகர் கீவ்வில் கடந்த சில தினங்களாக தாக்குதலை நிறுத்தி வைத்திருந்த ரஷ்யா, நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் குண்டு மழையை பொழிந்து வருகிறது. கீவ் மட்டுமல்லாமல் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் மீது ரஷ்யா கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பல குடியிருப்புகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ரஷ்யாவின் இந்த தாக்குதலானது ஐ.நா.வை அவமதிக்கும் செயல் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.