உலகெங்கும் பறவைக்காய்ச்சல் பரவி வருவதாகவும், இது கொரோனாவை விட மோசமானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தெற்கு அட்லாண்டிக் கடற்கரையின் ஜார்ஜியா தீவில் பல பழுப்பு நிற ஸ்குவாக்கள் (brown skuas) இறந்ததை அடுத்து, அதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் H5N1 என்ற பறவைக்காய்ச்சலால் அவை இறந்ததாக உறுதிசெய்தனர்.
இதன் தொடர்சியாக, அமெரிக்காவில் பறவைகாய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும், பறவைக்காய்ச்சல் என்று சொல்லப்படும் AH5N1 என்ற வைரஸ் அமெரிக்காவில் இரு மனிதர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மருத்துவ ஆராய்சியாளர்கள் கூறுகையில், ”பரவி வரும் பறவைக்காய்ச்சலின் தாக்கம் கொரோனாவை விட மிக மோசமானதாகவும் 100 மடங்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பறவைகாய்ச்சல் ஆராய்சியாளரான டாக்டர் சுரேஷ் குச்சிபுடி ஒரு தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இல்லாத வைரஸை பற்றி பேசவில்லை. உலகளவில் இருக்கும், ஏற்கனவே பல பாலூட்டிகளை பாதித்து வரும் ஒரு வைரஸைப் பற்றி பேசுகிறோம். நாம் தயாராக இருக்க வேண்டிய நேரம் இது" என்கிறார்.
மற்றொரு ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜான்ஃளூடன் கூறுகையில், ”இது கோரோனாவை விட 100 மோசமான வைரஸ், இது மனிதர்களை தாக்கினால், இறப்பு எண்ணிக்கையானது அதிகளவில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
1959ம் ஆண்டு கண்டறியப்பட்டது இந்த வைரஸானது பறவைகளிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்கிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியது. இந்த வைரஸ் தாக்கினால் இருமல், உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் ஏற்படக்கூடும். சிலருக்கு இத்துடன் நிமோனியாவும் தாக்கக்கூடும்.
இந்த வைரஸ் அமெரிக்காவில் பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு தாக்கியதாகவும் தற்பொழுது இந்த வைரஸ் உலகமெங்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்நோய்க்கான மருந்துகள் இருப்பதால் நோய் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தமுடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்பொழுது பறவைக்காய்சலுக்கான மருந்து தயாரிப்பதில் பல முக்கிய மருந்து கம்பெனிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.