இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இளம் வயதினரையும் குழந்தைகளையும் அதிகம் தாக்குகிறது என்று பரவும் தகவல்கள் குறித்தும், அதன் பின்புலத்தையும் ஆராய்ச்சியாளர்கள் சில விளக்கங்களை அளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து விடுபடப்போகிறோம் என்ற நம்பிக்கை சிறிது துளிர்விட்டு உலகமே பெருமூச்சு விடுகிற நேரத்தில், அந்த வைரஸ் உருமாறி மீண்டும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தில் அதிகம் பரவ ஆரம்பித்துள்ள இந்த உருமாறிய வைரஸானது மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதேசமயம், முன்பு பரவிய வைரஸைவிட இந்த வைரஸ் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கும் நம்மிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்கின்றனர் வல்லுநர்கள். பழைய மற்றும் உருமாறிய வைரஸுகளுக்கு இடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருந்தாலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தனித்துத்தான் நிற்கிறது.
ஆனால், இந்த வைரஸ் மிகவும் ஆபத்தான தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் எனவும், தற்போதைய சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸ்மீது செயல்படுமா என்பது போன்ற பல சந்தேகங்களையும் உலகெங்கிலும் உள்ள மக்களின் மனதில் அதிகரித்துவருகிறது.
முன்பிருந்த வைரஸைவிட இந்த உருமாறிய கொரோனா வைரஸால் இளம் வயதினர், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து அரசு மருத்துவர்கள் முதலில் ஆரம்பநிலை எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் நிபுணரும், NERVTAG ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் நீல் பெர்குசன் கூறுகையில், “இதற்கு முன்பிருந்த வைரஸால் பாதிக்கப்பட்டதைவிட, உருமாறிய வைரஸால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும், நவம்பர் மாதத்தில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டதால், குழந்தைகள் வெளியே செல்வது அதிகமாகி இருக்கிறது. அதனால்கூட தொற்று பரவலின் வேகம் அதிகரித்திருக்கலாம். அதேசமயம், அவர்களுக்கு புதிய உருமாறிய வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது’’ என்றார்.
உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் வேகம் 50 முதல் 70% வரை அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால், அதேசமயம் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது அல்லது குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எளிதில் பரவுகிறது என்ற கருத்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி பேராசிரியர் ஃபர்க்சன் கூறுகையில், ‘’இந்தக் கருத்தை நிரூபிக்க இன்னும் ஆராய்ச்சிகளும், சான்றுகளும் தேவைப்படுகிறது. ஆனால், தற்போதுவரை கிடைத்துள்ள அறிக்கைகளின்படி இந்த உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் உருமாறிய வைரஸானது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் அதிக முனைப்பைக் கொண்டிருப்பதற்கான குறிப்புகளும் கிடைத்துள்ளது’’ என்கிறார்.
மேலும் பிற ஆராய்ச்சியாளர்களும், குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகரித்திருக்கும் தரவு உண்மை என்றும், ஆனால் அதற்கான காரணங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.
உருமாறிய புதிய கொரோனா வைரஸின் மாதிரிகள் செப்டம்பர் 20ஆம் தேதி கென்ட்டிலிருந்தும், அடுத்த நாள் லண்டலினிலிருந்தும் சேகரிக்கப்பட்டன. அதன் தரவுகளிலிருந்து கிடைத்த தகவலின்படி, இங்கிலாந்தின் தென்கிழக்கில், கென்ட் மற்றும் லண்டனில் உருமாறிய வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கோவிட் -1 9 வைரஸால் குழந்தைகள் இதுவரை குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அவர்களின் உயிரணுக்களில் குறைந்த அளவு ACE2 ஏற்பிகள் இருப்பதே காரணம் என்று நம்பப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் விளக்குகையில், ‘’முன்பிருந்த கொரோனா வைரஸுக்கு ACE2 ஏற்பிகளை இணைத்து உயிரணுக்களுக்குள் செல்வதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. எனவே மூக்கு மற்றும் தொண்டையில் அதிக ACE2 ஏற்பிகளைக்கொண்ட முதியவர்களை குறிவைத்தது. ஆனால் தற்போது உருமாறிய வைரஸுக்கு இந்த செயல் சுலபமாக இருப்பதால் முதியவர்களுடன் குழந்தைகளையும் குறிவைத்திருக்கிறது.
இதனால், அதிக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்; அதேசமயம் இந்த வைரஸ் குழந்தைகளை மட்டும்தான் குறிவைத்திருக்கிறது என்று நாம் சொல்லமுடியாது. அதற்கான போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
இதுதொடர்பாக போதிய அறிவியல்பூர்வ சான்றுகள் இன்னும் இல்லாத நிலையில், பீதியுறாமல் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே மருத்துவ ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.