சர்வதேச அளவில் உலகின் மிகமுக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது சூயஸ் கால்வாய். இந்த கால்வாயில் கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாக தரை தட்டி நின்றது. கிட்டத்தட்ட ஒரு வார கால முயற்சிக்கு பிறகு கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் கப்பல் தரை தட்டி நின்ற காரணத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வழங்குமாறு சூயஸ் கால்வாய் ஆணையம், சம்மந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடம் தெரிவித்தது. அதற்காக அந்த கப்பலை ஒரு ஏரியில் பிணையாக பிடித்து வைத்துள்ளது.
சுமார் 916 மில்லியன் அமெரிக்க டாலர்களை கால்வாய் ஆணையம் கேட்டது. பிறகு 550 மில்லியன் அமெரிக்க டாலர் வரை குறைத்துக் கொல்லப்பட்டது. இந்நிலையில் கப்பல் நிறுவனம் இந்த இழப்பீடு தொகை வழங்குவதில் கால்வாய் ஆணையத்துடன் ஒரு உடன்பாடுக்கு வந்துள்ளதாக ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதோடு இழப்பீடுக்கான பரிந்துரையையும் கப்பல் நிறுவனத்திடம் ஆணியம் வழங்கி உள்ளதாம்.
தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவுக்கு வர கப்பல் நிறுவனம் எகிப்து நீதிமன்றத்திலும் இரண்டு வார காலம் அவகாசம் கோரியுள்ளது. முன்னதாக கப்பல் நிறுவனம் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முன் வருவதாக கால்வாய் நிறுவனத்திடம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.