உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் இன்று ஐரோப்பாவின் மிகப்பெரிய இரும்பு மற்றும் எஃகு ஆலை “அசோவ்ஸ்டால்” தாக்குதலுக்கு உள்ளாகி கடும் சேதத்தை சந்தித்துள்ளது.
உக்ரைன் மீது 3 வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரத்தை ரஷ்யப் படைகள் இன்று முற்றுகையிட்டன. நகரில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், துறைமுகத்தில் இருந்த கப்பல்கள், சரக்குப் பொருட்கள் என அனைத்தின் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த நகரத்தில்தான் ஐரோப்பாவின் மிகப்பெரிய இரும்பு மற்றும் எஃகு ஆலைகளில் ஒன்றான அசோவ்ஸ்டால் அமைந்துள்ளது. இது உக்ரைனின் மிகப் பெரிய பணக்காரரான ரினாட் அக்மெடோவ் என்பவரால் கட்டப்பட்டது. இவரது ஆலை மீதும் கடுமையான தாக்குதலை துவங்கின ரஷ்யப் படைகள். ஆலையின் கட்டடங்களில் இருந்து அடர்த்தியான சாம்பல் மற்றும் கருப்பு புகை நெடுவரிசைகள் எழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகின.
ரஷ்ய தாக்குதலில் ஆலை மோசமாக சேதமடைந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிற்சாலை கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. சரிசெய்ய வேண்டுமென்றால் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என சக ஊழியர் ஒருவர் தெரிவித்தார். ஆலை மீதான தாக்குதலால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரஷ்ய தாக்குதல் துவங்கும் முன்பே வெடி உலைகளை நிறுத்தி வைத்துவிட்டதாகவும், சுற்றுச் சூழல் பாதிப்பை தவிர்க்க தேவையானவற்றை ஏற்கனவே செய்து விட்டதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. "நாங்கள் இதே நகரத்திற்குத் மீண்டும் வருவோம். நிறுவனத்தை மீண்டும் உருவாக்குவோம், அதை புத்துயிர் பெறச் செய்வோம்" என்று அசோவ்ஸ்டாலின் டைரக்டர் ஜெனரல் Enver Tskitishvili நம்பிக்கை தெரிவித்துள்ளார்.