இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 13வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கட்டடங்கள் குண்டுவீச்சால் உருக்குலைந்து போய் இருக்கின்றன.
இந்த நிலையில், ஹமாஸின் தாக்குதலை அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. மேலும் அமெரிக்கா, தனது போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியது. அதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் இஸ்ரேலுக்குச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று (அக்.18) இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர், அதிபர் உள்ளிட்டோரைச் சந்தித்து அமெரிக்காவின் ஆதரவை நேரில் தெரிவித்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இன்று (அக்.19) இஸ்ரேல் சென்றார். அவரை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், “இஸ்ரேலின் இருண்டநேரத்தில் உங்களுடன் உங்கள் நண்பராக நிற்பதில் நான் பெருமைப்படுகிறேன். நாங்கள், உங்களுடன் ஒற்றுமையாக நிற்போம். உங்கள் மக்களுடன் நாங்கள் நிற்போம். மேலும் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றும் விரும்புகிறோம்” என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாலஸ்தீனியர்களும் ஹமாஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பின் காட்சிகளில் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளோம். எங்கும் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை இழந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இஸ்ரேல் பயணத்திற்குப் பிறகு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், சவுதி இளவரசரை இன்று சந்திக்கிறார். இதற்காக, இன்று மாலை இஸ்ரேலில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்டுச் செல்கிறார்.
முன்னதாக இஸ்ரேல் சென்று இறங்கிய அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, ’இந்த முக்கிய தருணத்தில் இஸ்ரேலில் நான் இருப்பதற்காக மனநிறைவடைகிறேன். அவை எல்லாவற்றையும்விட, இஸ்ரேல் மக்களுக்கான என்னுடைய ஆதரவை வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பேசமுடியாத, பயங்கரவாதத்தின் பயங்கர செயலால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள். இங்கிலாந்தும், நானும் உங்களுக்கு துணை நிற்கிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.