ஏர் பிரான்ஸ் விமானத்தின் என்ஜின் நடுவானில் வெடித்ததால் பயணிகள் பீதி அடைந்தனர்.
பாரிஸில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஏர் பிரான்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த, ஏர்பஸ் ஏ380 என்ற டபுள் டெக்கர் விமானம் நேற்று சென்று கொண்டிருந்தது. உலகின் மிகப்பெரிய விமானமான இதில், 24 விமான பணியாளர்கள் உட்பட 520 பயணிகள் இருந்தனர். விமானம் கனடா நாட்டின் மேல் பறந்துகொண்டிருந்த போது திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. பின்னர் குலுங்கியது. இதையடுத்து பயணிகள் பீதியடைந்தனர். விமானத்துக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாகக் கூச்சலிட்டனர்.
இதற்கிடையில் விமானத்தின் எஞ்சின் வெடித்துவிட்டதை உணர்ந்த விமானி, கனடா விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விமானம் தரையிறங்க அனுமதி கேட்டார். இதையடுத்து வடகிழக்கு கனடாவின் லாப்ராடர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதியளிக்கப்பட்டது. உடனடியாக விமானம் அங்கு தரையிறங்கியது. பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானம் நடுவானில் குலுங்கியதையும் விமான என்ஜின் வெடித்ததையும் பயணிகள் சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்துக் குறித்து ஏர் பிரான்ஸ் விமானத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.