உலகம் முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் போன்றவற்றால் கடல்வாழ் உயிரினங்கள் பெரும் ஆபத்துகளைச் சந்தித்துவருகின்றன. அண்மையில் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் உயிருக்குப் போராடிய நிலையில் கரை ஒதுங்கியது நினைவிருக்கலாம். சுற்றுச்சூழல் மாசுகளால் வனவுயிர் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன.
ஆழ்கடலில் தங்கிவிடும் பிளாஸ்டிக் கழிகளால் அங்குள்ள ஆமை போன்ற உயிரினங்கள், அதில் சிக்கிக்கொள்வது சகஜமான நடைமுறையாக மாறிவிட்டது. சிறு பிளாஸ்டிக் வளையத்தில் மாட்டிக்கொண்ட கடலாமையை மெல்ல மீட்கும் காட்சி அடங்கிய வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி பரவிவருகிறது.
இந்த வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி பர்வீன் காஸ்வான், தன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "நம்முடைய வனவுயிர்களை பிளாஸ்டிக் எப்படி கொல்கிறது? இங்கே நம்முடைய கழிவுகளில் இருந்து மீள்வதற்கு அரியவகை கடல் ஆமை போராடுகிறது. இதுவொரு உதாரணம்" என்று அவர் எழுதியுள்ளார்.
ஆமையின் கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக் வளையத்தை இரும்பு இடுக்கியைக் கொண்டு மெல்ல எடுக்கிறார்கள். அருகில் ஒரு பெண் அக்கறையுடன் ஆமையை கவனிக்கிறார். பின்னர், அந்த ஆமையை கடலில் கொண்டுபோய் விடுகிறார்கள்.