நாள்தோறும் வளரும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் இன்றைய உலகம் கைக்குள் சுருங்கிவிட்டது என்றே சொல்லலாம். அதற்கேற்றபடி, உணவு முறைகளும் மாறிவருகின்றன. தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டால் போதும், அனைத்துப் பொருட்களும் வீடு தேடியே வந்துவிடுகின்றன. அந்த வகையில் உணவும் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன. இதில் மேலைநாட்டு உணவுகளான பீட்சா, பர்கர் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றனர். இதை விரும்பி உண்ணும் உணவுப் பிரியர்களும் அதிகம் இருக்கிறார்கள். இதற்கெனெ பீட்சா ஹாட், மெக்டொனால்ட்ஸ், டோமினோஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் போட்டிபோட்டு விற்பனை செய்துவருகின்றன. இதில் டோமினோஸுக்கும் உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன.
இந்த நிலையில், சமீபத்தில் ஜப்பானில் உள்ள டோமினோஸ் கிளை ஒன்றில் பணியாளர் ஒருவர் பீட்சாவிற்கு மாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கையில் உறை அணிந்திருந்தாலும், அதனுடனேயே மூக்கினுள் ஒற்றைவிரலை உள்ளே விட்டு, பின் பீட்சா மாவில் கையைவைத்து பிசைகிறார்.
இந்தச் செயல் பார்க்கும் எல்லோரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் இந்த வீடியோவை டோமினோஸ் நிறுவனத்திற்குப் பகிர்ந்து கருத்து கேட்டுள்ளனர். அதனடிப்படையில், ஊழியரின் செயலுக்காக டோமினோஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான, உயர்ரக உணவுகளை வழங்குவதையே தாங்கள் நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.