ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த பெண் ஒருவர் தனது அம்மாவை, 36 வருடத்துக்குப் பிறகு இந்தியாவில் கண்டுபிடித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் கைமாஹ் பகுதியைச் சேர்ந்தவர் மரியம். இவர் சிறு வயதாக இருக்கும்போதே, அம்மாவும் அப்பாவும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து அப்பாவிடம் மரியத்தை விட்டுவிட்டு அவரது அம்மா இந்தியாவுக்கு சென்றுவிட்டார். அப்போது மரியத்தின் அம்மா எட்டு மாத கர்ப்பமாக இருந்தார். குழந்தையாக இருந்த மரியம், அம்மாவின் நினைவுகளோடும், அவரது அன்பை நினைத்துக்கொண்டும் வளர்ந்துவந்தார்.
அம்மாவை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையும் அவருக்கு ஆணித்தரமாக இருந்தது. இந்நிலையில் அவரது தந்தை இறந்தார்.
இதையடுத்து அம்மாவைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினார் மரியம். இந்தியா போன்ற பெரிய நாட்டில், அம்மாவை எங்கு போய் தேடுவது என்று யோசித்த அவர், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க முடிவு செய்தார். அவர் கொடுத்த விளம்பரத்திற்கு பலன் கிடைத்தது.
கடைசியாக மரியம் அவர் அம்மாவைக் கண்டுபிடித்தார். அங்கு போனால், அவருக்கு இன்னொரு ஆச்சரியமும் இருந்தது. அம்மாவை மட்டுமல்ல, தனது சகோதரியையும் கண்டு அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
இந்த சம்பவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சேனல்களில் நேற்று முன் தினம் வெளியானது. இந்தியாவில் எந்தப் பகுதியில் மரியம், தனது அம்மாவை கண்டுபிடித்தார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.