பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலா சென்ற விமானம் மாயமாகியுள்ளது.
பிரான்ஸின் நான்டஸ் அணியின் வீரரான எமிலியானோ சாலா இதுவரை நாந்த் கழகத்துக்கு கால்பந்து விளையாடி வந்தார். இந்நிலையில் வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் சிட்டி கால்பந்து அணி, அவரை இந்திய ரூபாய் மதிப்பில் 138 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இதனையடுத்து இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் சிறிய விமானம் மூலம் சாலா, பிரான்ஸில் இருந்து வேல்ஸ் நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
சனல் தீவுகளுக்கு மேலே பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விமானம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டு, விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விமானம் காணாமல் போனது குறித்து பேசிய விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானத்தில் கோளாறு போன்ற எந்தவித தகவல்களும் எங்களுக்கு வரவில்லை. திடீரென்று விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. என்ன காரணம் என்று புரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள நாந்த் கழகத்தின் தலைவர், சாலா ஒரு போராளி. அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கையுள்ளது. இது முடியவில்லை. அவர் எங்கேயோ இருக்கிறார். ஒரு நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
விமான பயணத்தின் போது காணாமல் போன சாலாவிற்காக சக வீரர்களும், அவரது ரசிகர்களும் அவருக்காக உலகெங்கிலும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.