கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஜப்பானில் தலைநகர் டோக்கியோ உள்பட 6 நகரங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு, டோக்கியோ, ஒஸாகா உள்ளிட்ட முக்கியமான 6 நகரங்களில் ஒரு மாத காலத்திற்கு அவசர கால நிலை பிரகடனம் செய்து பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஜப்பான் மக்கள் தொகையில் 44 சதவிகித மக்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால் மற்ற நாடுகளைப் போல இங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்றும், ரயில் மற்றும் வங்கி சேவைகள் வழக்கம் போல கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.