அமெரிக்காவில் நடைபெற்ற 47வது அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளார். வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்கவும் உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மறுபுறம், அவரைச் சுற்றி நிறைய எதிர்பார்ப்புகளும், சவால்களும் காத்திருக்கின்றன. இந்த நிலையில், டொனால்டு ட்ரம்ப்வின் நெருங்கிய நண்பரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க்கின் மகள், அமெரிக்காவை விட்டு வெளியேற இருப்பதாகத் தெரிவித்திருப்பது உலக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் முடிந்திருக்கும் நிலையில், அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய வெற்றிக்குக் கடுமையாக உழைத்தவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர். தவிர, அவருக்கு ஆதரவாக தேர்தல் நிதியையும் கடுமையாக வாரி இறைத்தார். இந்த நிலையில், எலான் மஸ்கின் திருநங்கை மகள் விவியன் வில்சன், அமெரிக்காவை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தந்தை எலான் மஸ்க்கின் பெயரை தனது பெயருடன் இணைத்து பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்ட விவியன், அப்போது முதலே இனி தனது தந்தையுடன் வாழப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து தந்தைக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் மீண்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், “என் எதிர்காலம் அமெரிக்காவில் இல்லை என்பதை உணர்கிறேன். இதுபற்றி சிறிது நேரம் நினைத்துக் கொண்டிருந்தேன், தற்போதுதான் உணர்ந்தேன். இனி என் எதிர்காலம் அமெரிக்காவில் இல்லை என்பதை உணர்ந்து வெளியேறப் போகிறேன்” என விவியன் தெரிவித்துள்ளார்.
இதற்கு எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் அளித்துள்ள பதிலில் “என் குழந்தை ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது இப்படி சொல்வதற்கு எல்லாம் முழு முதல் காரணம் என் மேல் உள்ள வெறுப்புதான்” என தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் குழந்தைகளில் ஒருவரான விவியன் 2004இல் இரட்டைச் சகோதரர்களாக பிறந்தார். இவரது தாயார் ஜஸ்டீன் வில்சன் 2008இல் மஸ்க்கை விவாகரத்து செய்துகொண்டார். 2022இல் தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றக் கோரி சட்டப்பூர்வ ஆவணங்களை தாக்கல் செய்தார். இவருடன் பிறந்த இன்னொரு இரட்டையரான சகோதரர் Griffin என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: IND Vs SA | ஒரே போட்டி.. ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்.. பல சாதனைகள் முறியடிப்பு!