உலகின் மிகப்பெரிய சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், தற்போது கோகோகோலா நிறுவனத்தை வாங்கப் போவதாக ட்வீட் செய்துள்ளது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
உலகிலேயே முதன்மை பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க், புகழ்பெற்ற சமூக வலைதளமான ட்விட்டரை கடந்த திங்கள்கிழமை விலைக்கு வாங்கினார். சுமார் 44 பில்லியன் டாலருக்கு அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியிருக்கிறார்.
பேச்சு சுதந்திரத்துக்கும், கேளிக்கைகளுக்கும் எலான் மஸ்க் அதிக முக்கியத்துவம் அளிப்பவர் என்பதால் ட்விட்டரில் விரைவில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி உலகையே அதிர்ச்சி அடைய செய்திருக்கும் எலான் மஸ்க், இன்று ஒரு புதிய ட்வீட்டை வெளியிட்டு பெரும் சர்வதே அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தப் பதிவில், "அடுத்ததாக நான் கோகோகோலாவை வாங்கப் போகிறேன். கொக்ககைனை (போதைப்பொருள்) அதில் சேர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.
எலான் மஸ்கின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உண்மையிலேயே கோகோகோலா நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குகிறாரா அல்லது நகைச்சுவைக்காக இவ்வாறு கூறினாரா என்பது தெரியாமல் பொதுமக்களும், பங்குச்சந்தை நிபுணர்களும் விழிபிதுங்கி வருகின்றனர். எலான் மஸ்க் விடை தந்தால் மட்டுமே இதுகுறித்த உண்மை தெரியவரும் என நெட்டீசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.