இந்திய பயணத்தை ஒத்திவைத்த, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் சீனாவுக்கு சென்ற நிலையில், அந்நாட்டின் பிரதமர் லீ கியாங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஸ்டார் லிங் திட்டம் குறித்த அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பயணம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது.
இந்தியா பயணம் தள்ளிவைக்கப்பட்டு ஒருவாரம் கூட ஆகாத நிலையில் மஸ்க் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மின்சார வாகன சந்தையில் உலகின் 2ஆவது மிகப்பெரிய நாடாக திகழும் சீனாவுக்கு எலான் மஸ்க் திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதில் தானியங்கி கார்களுக்கான மென்பொருளை சீனாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக சீனா அதிகாரிகளுடன் எலான் மஸ்க் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.