அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை மையமாகக் கொண்டு இயங்கும் நியூராலிங்க் என்ற நிறுவனம் மனிதனின் மூளையை நேரடியாக இயந்திரங்களோடு இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது. தற்போது விலங்குகளைக்கொண்டு இந்நிறுவனம் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, குரங்கின் மூளையில் கணினி சிப் பொருத்தி, நியூராலிங் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. மூளையில் உள்ள சிப்-பின் தொழில்நுட்பம் மூலம் தானாகவே வீடியோ கேம் விளையாடும் அளவிற்கு குரங்கை ஆய்வாளர்கள் மாற்றியுள்ளனர்.
இது குறித்து அதனை வடிவமைத்த தொழில் அதிபர் எலான் மஸ்க் கூறும் போது, “குரங்குகளின் நரம்பியல் செயல்பாடுகளை, கணினியில் பதிவிட்டு அதற்கேற்றபடி சிப்-ஐ வடிவமைத்து, இந்த செயலை செய்துள்ளோம்” என்றார்.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறும் போது, “ இந்த ஆராய்ச்சிகள் வெற்றிபெற்றுவிட்டால் மனிதனின் மூளையில் பொருத்தப்படும் கணினி சிப்கள் மூலம், இயந்திரங்களை நேரடியாக கட்டுப்படுத்த முடியும்.அத்துடன் நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் மூளையின் மூலம் கணினியை இயக்க முடியும். இது மட்டுமன்றி உடலில் ஏற்படும் நரம்பியல் தொடர்பான நோய்கள், முதுகுத் தண்டுவட பிரச்னைகளையும் குணப்படுத்த முடியும்.
விலங்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த தொழில்நுட்பம் மனிதர்களில் பொருத்தி இயக்குவது கடும் சவாலாகவே இருந்தாலும், இதில் வெற்றிபெற்றுவிட்டால், தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சியை எட்டமுடியும்” என்றனர்.