தனி விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதற்காக ரூ 1.93 கோடி ரூபாய் பணம் கொடுத்து பிரச்னையை தீர்த்ததாகவும் தன் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக பில்லியனர் எலான் மஸ்க் சவால் விடுத்துள்ளார்
எலான் மஸ்க் 2016 ஆம் ஆண்டில் தனி ஜெட் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரச்னைக்கு தீர்வு காண, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் 250,000 டாலர் வழங்கியதாக பிசினஸ் இன்சைடர் செய்தி வெளியிட்டிருந்தது. பாதிக்கப்பட்ட அந்த விமானப் பணிப்பெண்ணின் தோழி இந்த தகவலை உறுதி செய்ததாக அந்தக் கட்டுரை மேற்கோள் காட்டியது. மேலும், இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அந்த விமான பணிப்பெண்ணுக்கு பணம் வழங்கும் நடவடிக்கையின்போது தான் கூட இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
2016 ஆம் ஆண்டில் ஒரு தனி ஜெட் விமானத்தில் எலான் மஸ்க் பயணிக்கும்போது, திடீரென அங்குள்ள தனி அறையில் ஒரு விமான பணிப்பெண் முன்பு மஸ்க் ஆடையின்றி நின்றதாகவும், அப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு என எலான் மஸ்க் தொடர்ந்து மறுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "தனது தோழியின் முன்பு நான் என்னை 'வெளிப்படுத்தினேன்' என்று கூறும் இந்த பொய்யருக்கு ஒரு சவால். எனது உடலில் உள்ள பொது மக்களுக்குத் தெரியாத ஒரூ அடையாளத்தை மட்டும் (வடுக்கள், பச்சை குத்தல்கள், ...) அவர் தெரிவிக்க வேண்டும். அவரால் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் அது நடக்கவேயில்லை" என்று தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சியின் உள்ளவருமான எலான் மஸ்க், ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு பதிலாக ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு இனி வாக்களிக்க உள்ளதாக கூறினார், இதனால் விமானப் பணிப்பெண்ணின் இந்த பாலியல் குற்றச்சாட்டு, "அரசியல் ரீதியான உந்துதலைப் பெற்ற ஒரு மோசமான தந்திர பிரச்சாரம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.