அமெரிக்காவில் நடைபெற்ற 47வது அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளார். வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்கவும் உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மறுபுறம், அவரைச் சுற்றி நிறைய எதிர்பார்ப்புகளும், சவால்களும் காத்திருக்கின்றன.
இந்நிலையில்தான் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது இரண்டாவது அரசாங்கத்தில் தொழிலதிபர்களான எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்க செயல்திறன் (Department of Government Efficiency) துறைக்கு தலைமை தாங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும், அதிகப்படியான விதிமுறைகளை குறைக்கவும், அரசின் செலவழிக்கும் பணம் வீணாவதைக் குறைக்கவும், ஃபெடரல் ஏஜென்சிகளை மறுசீரமைப்பதற்கும் எனது அரசாங்கத்திற்கு பாதை வகுத்துக்கொடுப்பார்கள். ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை வெளியில் இருந்து வழங்குவார்கள்.
அமெரிக்க அரசின் வருடாந்திர பட்ஜெட்டான 6.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அரசாங்கத்தின் செலவுகள் வீணாவதையும், மோசடிகளையும் குறைப்பார்கள்” என தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டதன் 250ஆவது ஆண்டு நிறைவான ஜூலை 4, 2026க்குள் மஸ்க் மற்றும் விவேக் இருவரும் தங்களது பணிகளை முடிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பெயரில் அரசாங்கம் என இருந்தாலும் இது அரசாங்கதுறை அல்ல. அரசாங்கத்திற்கு வெளியில் இருந்தே ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் துறைமட்டுமே. இந்த துறை Federal Advisory Committee Act எனும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படலாம் என்று தெரிவிக்கின்றனர் அரசியல் ஆலோசகர்கள். FACA என்பது வெளியில் இருந்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும்.
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று அதிபர் வேட்பாளரான ட்ரம்பும், எலான் மஸ்கும் எக்ஸ் தளத்தில் நேரலையில் உரையாடினர். அப்போது எலான் மஸ்க், அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்க (government waste) புதிய கமிஷன் அமைக்கும் யோசனையை முன்வைத்தார். இதற்கு மஸ்கைப் பாராட்டிய ட்ரம்ப், “எனக்கு எலான் மஸ்க் தேவை. நிறைய வலிமையும், தைரியமும், புத்திசாலிகளும் தேவை” என பதிலளித்தார். ட்ரம்ப் தனது பரப்புரையில் கூட எலான் மஸ்க் கொடுத்த யோசனையை பேசி இருந்தார். இதன் அடிப்படையிலேயே தற்போது ட்ரம்ப் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.