டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க்கின் இதுவரை காணாத அரிய புகைப்படங்களை ஏலத்தில் விட்டு பணம் சம்பாதிக்க முடிவு செய்திருக்கிறார் அவரது முன்னாள் காதலி.
வரலாற்றில் அரிய சாதனைகளை செய்த தலைவர்களின், மிகக் கொடூர செயலைச் செய்த சர்வாதிகாரிகளின் புகைப்படங்கள் பொதுவாக ஏலம் விடப்படுவதை பார்த்திருப்போம். பலரும் போட்டி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை கோடிகளை கொடுத்து வாங்கிச் செல்வதும் வழக்கமானதுதான். ஆனால் சமீபத்தில் இந்த புகைப்பட ஏல விவகாரத்தில் ஒரு விநோத சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்கின் புகைப்படங்கள் ஏலத்திற்கு வந்துள்ளன.
இந்த படங்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருப்பது அவரல்ல. 48 வயதை நெருங்கியிருக்கும் அவரது முன்னாள் காதலி ஜெனிஃபர் க்வின். இவரும் எலான் மஸ்கும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் இருவரும் டேட்டிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களைத்தான் ஏலத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இருவருக்கும் 20 வயது இருக்கும்போது இருவரும் ஒருவரை ஒருவர் ஒரு வருட காலத்திற்கு காதலித்தபோது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்பட்டங்கள் இதுவரை யாரும் பார்க்காத எலான் மஸ்க்கின் அரிய புகைப்படங்கள் எனக் கூறப்படுகிறது.
தற்போது இந்த புகைப்படங்களை பொதுவெளியில் ஏலம் விடுவதற்கான காரணத்தையும் ஜெனிஃபர் தெரிவித்துள்ளார். தனது வளர்ப்பு மகனின் கல்விக்கு நிதியளிக்கவே இந்த ஏலத்தில் புகைப்படங்களை விற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த புகைப்படங்கள் ஆர்ஆர் ஏல இணையதளத்தில் வாங்குவதற்குக் கிடைக்கின்றன.
மேலும் இந்த படங்களில் பெரும்பாலானவற்றிற்கான குறைந்தபட்ச ஏலம் $100 இலிருந்து தொடங்குகிறது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு புகைப்படத்தின் குறைந்த பட்ச ஏலத்தொகை ரூ.7,900 ஆகும். எலோன் மஸ்க்கின் பதினெட்டு புகைப்படங்கள் இந்த ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது.