ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.. உயிரிழப்புகள் மேலும் உயரும் என அந்நாட்டு பிரதமர் கவலை தெரித்துள்ளார்.
ஜப்பானின் இஷிகா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாகக் கொண்டு புத்தாண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்நாட்டு வானிலை மையம் தெரிவிக்கையில், “நேற்று முதல் 155 முறை அதிர்வுகள் ஏற்பட்டது. அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது.என்று தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின்போது 6 முறை மிக வலுவான அதிர்வுகள் ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் கட்டடங்களும் குலுங்கின. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில இடங்களில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது. கடற்பகுதிகளில் 5 மீட்டர் உயரம் வரை ஆழிப்பேரலை தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இருப்பினும், கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போதுவரை இடிபாடுகளில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் உறைபனி நிலவுவதால் வீடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்பதில் கடும் சவாலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என அஞ்சுவதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.