வேகமாக நகரும் காந்த வடதுருவம்: திசைகாட்டிகளை மேம்படுத்தக்கோரும் ஆராய்ச்சியாளர்கள்!

வேகமாக நகரும் காந்த வடதுருவம்: திசைகாட்டிகளை மேம்படுத்தக்கோரும் ஆராய்ச்சியாளர்கள்!
வேகமாக நகரும் காந்த வடதுருவம்: திசைகாட்டிகளை மேம்படுத்தக்கோரும் ஆராய்ச்சியாளர்கள்!
Published on

சைபீரியாவை நோக்கி பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகர்ந்து வருவதால் திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றில் திசைகாட்டிகளை மேம்படுத்த வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் ‌இருக்கின்றன. அதேபோல பூமியை சுற்றி இருக்கும் காந்தப்புலத்திற்கு இரு துருவங்கள் உண்டு. இவை விண்கலன்கள் மூலம் ஆராயப்பட்டு வருகின்றன. அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரியவந்துள்ளது. பூமியின் காந்த மண்டலம்தான் நம்மை சூரியனிலிருந்து வரும் கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. காந்த மண்டலம் இல்லாவிட்டால் சந்திரன், செவ்வாய் போல பூமியும் உயிரினங்கள் இன்றி வறண்டு போய் காட்சி தரும்.

பூமியின் ஆழத்தில் திரவ இரும்புகளில் எதிர்பாராத மாற்றங்களால் உருவாகும் காந்த துருவம் இயக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அரசு நிறுவனங்களான நாசா, பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் ‌, அமெரிக்க வன சேவை உட்பட மேப்பிங் முதல் விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு வரை இந்த காந்த துருவங்கள்தான் ஆதாரமாக உள்ளது.

பூமியின் காந்த வடதுருவம் என்பது காந்தப்புலத்தை பொறுத்து, புவி மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளி. காலத்துக்கும், புவியியல் மாற்றத்துக்கும் ஏற்ப இது மாறுபடுகிறது. பூமியின் காந்த வட துருவத்தின் அமைவிடம் 1831-ஆம் ஆண்டு முதல் கனடாவின் ஆர்டிக் பகுதியில் இருந்து சைபீரியாவை நோக்கி, வேகமாக நகர்ந்து வருவதாக புவியியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

1831-ம் ஆண்டிலிருந்துதான் வடபுலம் துல்லியமாக குறிக்கப்பட்டது. ஆனால், அப்போதிருந்தே ஆண்டுக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் இடம்பெயர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த வேகம் தற்போது சராசரியாக 54.7 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. பூமியின் காந்தபுலம், குறிப்பாக காந்த வடதுருவத்தை அடிப்படையாக கொண்டே உலகளாவிய போக்குவரத்து கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் திசைகாட்டும் கருவியில் புதிய மாற்றங்கள் வேகவேகமாக செய்யப்பட்டு வருகிறது.

2020-ஆம் ஆண்டுக்கான உலக காந்த மாதிரி தகவல்படி, காந்த வட துருவப்பாதை அடுத்த சில ஆண்டுகளுக்கு ரஷ்யாவில்தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் வேகம் சற்றே குறைந்து இனி ஆண்டுக்கு சராசரியாக 40 கிலோ மீட்டர் என இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. எனினும் 1831-ம் ஆண்டு முதல் தற்போது வரை காந்த வடதுருவம் 2 ஆயிரத்து 253 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது.

புவியியல் துருவங்களைப் போல் அல்லாமல், காந்த துருவங்கள் வடதுருவத்தில் இருந்து தென் துருவத்திற்கும் தென் துருவத்தில் இருந்து வட துருவத்திற்கும் மாறலாம். இது கடந்த காலங்களில் நிகழ்ந்ததாகவும், இந்த நிகழ்வு ஒவ்வொரு சில லட்சக்கணக்கான ஆண்டுகளிலும் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

வட காந்த முனை நோக்கி திசைகாட்டியின் ஊசிகள் உள்ளன. வடபுல மாற்றத்தால், திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அடுத்த மாற்றம் எப்போது நடக்கும் என்று விஞ்ஞானிகளுக்கு தெரியாது‌. அத்தகைய மாறுதல்‌கள் உடனடியாக நிகழ்வதற்கான ஆதாரங்களும் இல்லை என்றே கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com