நெதர்லாந்தில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய உயிரணுவை செலுத்தி 49 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் பகுதியில் கருத்தரிப்பு மருத்துவமனை நடத்தி வந்தவர் டாக்டர். ஜான் கார்பத். அவரது மருத்துவமனைக்கு செயற்கை கருத்தரிப்புக்காக குறிப்பிட்ட உயிரணுவுடன் பெண்கள் வருவது வழக்கம். ஆனால் மருத்துவர் கார்பத், பெண்கள் கொண்டு வரும் உயிரணுக்களை பயன்படுத்தாமல் தன்னுடைய உயிரணுக்களையே பயன்படுத்தியுள்ளார்.
1980களில் இவருடைய உயிரணுக்களில் பல குழந்தைகள் பிறந்துள்ளன. பல வருடங்களுக்கு பிறகு இந்த விவகாரம் வெளியே கசிந்துள்ளது. கிட்டத்தட்ட 49 பிள்ளைகளுக்கு கார்பத் தந்தையாகியுள்ளார். வளர்ந்த குழந்தைகள் சாயலில் ஒரே மாதிரி இருந்ததால் சந்தேகம் அடைந்தவர்கள் இது குறித்து சமீபத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைவரது டிஎன்ஏ வையும் சோதனை செய்துள்ளது. அந்த சோதனையில் 49 பேருக்கு கார்பத்தே தந்தை என தெரியவந்துள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு இந்த உண்மை வெளியே தெரிந்தாலும், மருத்துவர் ஜான் கார்பத் 2017ம் ஆண்டே வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.