குழந்தைகளுடன் மனைவி லண்டனில் தலைமறைவாக இருப்பதால், விரக்தி அடைந்த துபாய் மன்னர், ஆக்ரோஷ கவிதைகளை எழுதி வருகிறார்.
துபாய் மன்னர், ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டோம் (69). இவரது ஆறாவது மனைவி இளவரசி ஹயா பின்ட் அல் ஹூசைன். ஜோர்டான் மன்னரின் சகோதரியான இவருக்கு ஜலிலா (11), சையத் (7) ஆகிய இரண்டு குழந்தைகள். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கோரியுள்ளார். இது தொடர்பான பிரச்னையில் மே மாதம் தலைமறைவானார். அவர் ஜெர்மன் நாட்டில் தஞ்சம் கோரினார் என்றும் ஆனால் அந்நாடு அவருக்கு அடைக்கலம் தர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் தனது குழந்தைகளுடன் 31 மில்லியன் பவுண்டுகளையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டதாகவும் அவர் தப்பிக்க, ஜெர்மன் அதிகாரிகள் சிலர் உதவியதாகவும் சமீபத்தில் செய்தி வெளியாயின. தனது மனைவியை துபாய்க்குத் திருப்பி அனுப்பி வைக்கும்படி, மன்னர் விடுத்த கோரிக்கையை ஜெர்மன் நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஹயா தனது குழந்தைகளுடன் லண்டனில் தலைமறைவாக இருப்பதாகவும், அங்கு அடைக்கலம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால், விரக்தி அடைந்துள்ள மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டோம், ஆக்ரோஷமான கவிதை களை எழுதி வருகிறார். அதை, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார்.
சமீபத்தில் உருது மொழியில் எழுதியுள்ள கவிதைக்கு, ‘’நீ வாழ்ந்தாய், மரித்தாய்’ என்று தலைப்பிட்டுள்ளார். அதில், ’’நீ நம்பிக்கைத் துரோகி, விலைமதிப்பற்ற நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டாய். உனது ஆட்டம் வெளியே தெரிந்துவிட்டது. நாம் யாராக இருந்தோம், நீ யாராக இருந்தாய் என்பது முக்கியமல்ல, நீ பொய் சொன்ன நாட்கள் முடிந்துவிட்டன’’என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு கவிதையில், ’’அன்பே, இன்னும் அதிகம் சொல்ல ஏதுமில்லை. உன் மரண அமைதி என்னைத் துன்புறுத்துகிறது’’ என்றும் மற்றொரு கவிதையில், ’’இனி உனக்கு என்னிதயத்தில் இடமில்லை’’ என்றும் ‘’நீ வாழ்ந்தாலும் இறந்தாலும் எனக்கு கவலை இல்லை’’ என்று மற்றொரு கவிதையிலும் குறிப்பிட்டுள்ளார். மன்னரின் கவிதைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.