துபாயைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல் நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி செளதி அல் நடக். இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல் நடக், துபாயில் படித்துக்கொண்டிருந்தபோது ஜமால் அல் நடக்கைச் சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. மனைவி மீது மிகவும் அன்பு கொண்ட ஜமால் அல் நடக், அவருக்காக ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கி உள்ளார். இந்த நிலையில் தனது மனைவி நீச்சல் (பிகினி) உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்ட நிலையில், அவருக்காக ஜமால் அல் நடக் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார்.
இதுதொடர்பாக செளதி அல் நடக், அதுகுறித்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். என்றாலும், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவின் சரியான இருப்பிடத்தின் தகவலை வெளியிட செளதி அல் நடக் மறுத்துவிட்டார். ஆனால், தனக்காக தனது கணவர் ஜமால் அல் நடக், இந்தத் தீவை வாங்குவதற்காக 50 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.418 கோடி) செலவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து செளதி அல்நடக், ”எனது கணவர் வாங்கிய தீவு ஆசியாவில் உள்ளது. தனியுரிமை காரணங்களுக்காக நாங்கள் தீவின் சரியான இடத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ஒரே வாரத்திற்குள் 24 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஏற்கெனவே செளதி அல் நடக், தனது ஆடம்பர வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதிஅல்நடக்கின் பிறந்தநாளன்று அவரது கணவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததாக செளதி அல் நடக் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. அதில் செளதி அல் நடக் ஷாப்பிங் செய்வதற்காக ரூ.12 லட்சம் செலவழித்தாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும், ஹெர்ம்ஸ் பிராண்ட்டின் ஷோரூமில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வாங்கியதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.