திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழி. ஆனால், இன்று வலைத்தளங்களுக்குள்ளேயே அடங்கி விடுகின்றன என்பதுதான் நிதர்சனம். அது மட்டுமின்றி ஒருசில பணக்காரர்கள் தங்களுடைய பணபலத்தைக் காட்டும் வகையில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைப்பதும் அரங்கேறி வருகிறது. மலையில், விமானத்தில், கடலில் என வித்தியாசமான சூழல்கொண்ட இடங்களில் திருமணம் செய்வதும் இயல்பாகி விட்டது. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் திருமணத்தை துபாயில் தனியார் ஜெட் விமானத்தில் நடத்தியுள்ளார்.
அமீரகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் திலீப் பாப்லி. இவர் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நகைகள் மற்றும் வைர நகை கடைகளை நடத்திவரும் பாப்லி குடும்பத்தை சேர்ந்தவர். இவரது மகள் விதி பாப்லி. இவர் தனது மகள் விதி பாப்லி திருமணத்தை, வித்தியாசமாக நடத்த முடிவு செய்தார்.
ஏற்கெனவே விதி பாப்லி மற்றும் ஹரிதேஷ் சைனானி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி, துபாயில் இருந்து ஓமனுக்குச் செல்லும் 3 மணி நேர விமான பயணத்தின்போது துபாயில் போயிங் 747 விமானத்தில் நடைபெற்றது. முன்னதாக பாரம்பரிய முறைப்படி திருமண ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு அவர்களது நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்பட 350 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் திருமணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த போயிங் 747 விமானத்தில், கல்யாண ஜோடியுடன் விருந்தினர்கள் விமானத்தில் ஏறினர். இந்த விமானம் திருமண விழாவுக்காக மாற்றியமைக்கப்பட்டது. விமானம் துபாயில் இருந்து ஓமனை நோக்கி வானில் பறக்கையில், விதி பாப்லி - ஹரிதேஷ் சைனானி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. விமானத்தில் பிரபலமான இந்தி பாடலுக்கு விருந்தினர்கள் உற்சாகமாக நடனமாடினர்.
திருமணம் முடிந்தபிறகு, விமானத்தில் விருந்தினர்களுக்கு, விருந்து வழங்கப்பட்டது. மகள் விதி பாப்லியின் இந்த திருமணத்தைப் போன்றே, அவரது பெற்றோரும் 28 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் கொண்டவர்கள். அவர்கள் ஏர் இந்தியா விமானத்தை திருமண இடமாக மாற்றினர். அப்போது இது பரவலாக பேசப்பட்டது. தற்போது மகளின் திருமணத்தையும் விமானத்தில் நடத்தி மீண்டும் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: இலங்கை டூ இந்தியா: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்