பெற்ற தாய், தந்தையரை தொடர்ந்து தொந்தரவு செய்ததற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை இங்கிலாந்து போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்களது தேவை நிறைவேறாத பட்சத்தில் சுற்றத்தில் இருக்கும் எவருக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல், அவர்கள் யார் எவரென்று என எதையுமே பார்க்காமல் முற்றிலும் வேறொரு ஆளாகவே நடந்துக்கொள்வார்கள் என சொல்வதுண்டு.
அது போல, போதைக்கு அடிமையான இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவன் படேல் என்பவர் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தொடர்ந்து தனது பெற்றோரை தொந்தரவு செய்த வண்ணம் இருந்திருக்கிறார்.
போதைப் பொருட்களுக்கு தடை இருந்த போதிலும், இடைவிடாது தனது பெற்றோரை உளவியல் ரீதியாக பிளாக் மெயில் செய்து வற்புறுத்தியிருக்கிறார். மகன் தேவன் படேலின் இந்த செயலால், அவரது பெற்றோர் இருவரும் மனதளவில் நொந்துப் போயிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக போதைப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாதென ஏற்கெனவே தேவன் படேலுக்கு வால்வர்ஹாம்ப்டன் கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதாவது 2009 மற்றும் 2013 ஆகிய இரு ஆண்டுகளின் போதும் தேவன் படேலுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அதனை மூன்றுக்கும் அதிகமான முறை தேவன் மீறியிருக்கிறார்.
இதுபோக அவரது பெற்றோருக்கு தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டு பணம் கேட்டு தொந்தரவும் செய்திருக்கிறார். அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் பெற்றோர்கள் இருக்கும் இருப்பிடத்துக்கே சென்று பணம் கேட்பதை தேவன் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.
இதன் காரணமாக தேவனின் பெற்றோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி போலீசாரை தொடர்புகொண்டு இதற்கு மேலும் கொடுப்பதற்கு பணமில்லை எனச் சொல்லி அவர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். இதனையடுத்து தேவன் படேலை கைது செய்த இங்கிலாந்து போலீசார் அவரை கார்டிஃப் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.