அமெரிக்கா ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதியிலிருந்து 19 கோடி டாலர் தொகையை குறைத்துள்ளார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு வழங்கப்படும் 10 கோடி டாலர் உட்பட 34.4 கோடி டாலர் மட்டுமே இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆண்டு கொடுக்கப்பட்ட நிதியை விட இது 19 கோடி டாலர் குறைவு.
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுதல், அணு ஆயுதப் பரவலைத் தடுத்தல், மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, பாகிஸ்தானுக்கு 53.4 கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 22.5 கோடி டாலர் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியோடு ஒப்பிடும்போது 19 கோடி டாலர் நிதியை அதிபர் டொனால்டு டிரம்ப் குறைவாக ஒதுக்கியுள்ளார். இந்த நிதிக்கான காலம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிகிறது.
ஆசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு பிறகு பாகிஸ்தான் தான் அமெரிக்காவிலிருந்து அதிகமாக நிதி பெறும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.