சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சாக்லேட் கேக் சாப்பிட்டு கொண்டே சிரியா மீது ஏவுகணைகளை வைத்து தாக்கும் முடிவை எடுத்தாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தன் சொந்த மக்கள் மீது ரசாயனக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய சிரியா மீது, அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. சிரியா விமானப்படைத் தளத்தின் மீது 59 ஏவுகணைகளை வீசியது அமெரிக்கா.
இது குறித்து பேசிய டிரம்ப், “நானும் சீன அதிபரும் விருந்தை முடித்துவிட்டு உலகிலேயே மிக அருமையான சாக்லேட் கேக்கை ருசித்து கொண்டிருந்த போது, என்னிடம் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் சிரியாவை தாக்க ஏவுகணைகள் தயாராக இருப்பதாக கூறினர்,” என்றார்.
பின் உறுதியோடு நான் ஈராக் மீது தாக்குதல் நடத்த சொன்னேன் என்று தவறான நாட்டின் பெயரை தெரிவித்தார். பின் நிகழ்ச்சி நடத்துபவர் “சிரியா தானே?” என்று கேட்ட பின் “ஆம். சிரியா” என மாற்றிக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தான் சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து விளக்கியதாகவும் அவர் தாக்குதல் நடத்துவது சரி என்று கருதுவதாகவே தெரிகிறது எனவும் கூறினார்.