160 மில்லியன் டாலர் மதிப்பு., 'குளிர்கால வெள்ளை மாளிகை'... ட்ரம்ப் நிரந்தர இல்லம் இதுதான்!

160 மில்லியன் டாலர் மதிப்பு., 'குளிர்கால வெள்ளை மாளிகை'... ட்ரம்ப் நிரந்தர இல்லம் இதுதான்!
160 மில்லியன் டாலர் மதிப்பு., 'குளிர்கால வெள்ளை மாளிகை'... ட்ரம்ப் நிரந்தர இல்லம் இதுதான்!
Published on

புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பு, ஏற்கெனவே ட்விட்டரில் அறிவித்திருந்தபடி வெள்ளை மாளிகையைவிட்டு டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியேறினார். அமெரிக்காவின் அதிகார மையமான வெள்ளை மாளிகையை விட்டு ட்ரம்ப் வெளியேறியபோது அவர் 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்கமாக பதவியேற்பு நாளன்று காலையில் பதவி முடியும் அதிபர், புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு விருந்தளிப்பார். பின்னர் இவர்கள் இணைந்து சென்று பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பர். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக பதவியேற்பு விழாவை புறக்கணித்துவிட்டு ஃப்ளோரிடாவின் பாம் பீச்சின் கரையோரத்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது மார்-எ-லாகோ பண்ணை வீட்டிற்கு சென்றார் ட்ரம்ப். இப்போது இந்த வீட்டையே தனது நிரந்தர குடியிருப்பாக மாற்ற ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கேற்ப, ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தனது இறுதி நாள்களை கழித்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்து பாம் பீச்சில் உள்ள மார்-எ-லாகோ இல்லத்திற்கு லாரிகளில் பொருட்கள் வந்திறங்கின என்று அப்பகுதி மக்கள் கூறியதாக 'நியூயார்க் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.

குளிர்கால வெள்ளை மாளிகை!

ட்ரம்ப்பின் இந்த மார்-எ-லாகோ இல்லம் அமெரிக்க மக்கள் மற்றும் ஊடகங்களால் 'குளிர்கால வெள்ளை மாளிகை' என அழைக்கப்படுகிறது. காரணம், தனது நான்கு ஆண்டு அதிபர் பதவி காலத்தில் குளிர்காலம் வரும்போதெல்லாம், மார்-எ-லாகோ இல்லத்தில்தான் ட்ரம்ப் கணிசமான நேரத்தை செலவிட்டார். மேலும், தனது சட்டப்பூர்வ இல்லத்தை நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் கோபுரத்திலிருந்து 2019 செப்டம்பரில் மார்-எ-லாகோவாக மாற்றி குளிர்காலத்தில் அங்கு இருந்து வந்தார். இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது குளிர்கால இல்லமாக மார்-எ-லாகோ இருந்து வந்தது.

பலரும் வியக்கும் வண்ணம் இந்த மாளிகை உள்ளது. 1985 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர்களுக்கு இந்த மாளிகையை வாங்கி ஒரு தனியார் கிளப்பாக மாற்றி இருக்கிறார் ட்ரம்ப். மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் தோட்டத்துடன் கூடிய மாளிகையாக இது இருக்கிறது. மூரிஷ்-மத்திய தரைக்கடல் (Moorish-Mediterranean structure) கட்டமைப்பால் ஈர்க்கப்பட்டு மார்ஜோரி மெர்ரிவெதர் போஸ்டால் 1927-ல் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. இப்போது 128 அறைகளுடன் ஒரு கிளப்பாக உள்ளது.

20,000 சதுர அடி பால்ரூம், ஐந்து களிமண் டென்னிஸ் கோர்ட்டுகள், நீச்சல் குளம் என ஒரு பிரமாண்ட படைப்பாக இந்த மாளிகை பார்ப்பவர்களுக்கு வியப்பளிக்கும் என அமெரிக்க ஊடகங்கள் வர்ணித்துள்ளன. மேலும், இந்த மாளிகையில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலை நேரடியாக பார்த்து ரசிக்கலாம். இது ஃப்ளோரிடா மாநிலத்தில் இரண்டாவது பெரிய மாளிகை என அறியப்படுகிறது.

10 மில்லியன் டாலர்களுக்கு இந்த மாளிகையை வாங்கி, இருந்தாலும், விரிவான புனரமைப்பு மற்றும் இருப்பிடத்தின் தனித்தன்மை காரணமாக தற்போது இந்த தோட்டத்தின் மதிப்பு சுமார் 160 மில்லியன் டாலர்களாக இருக்கும் என்று ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது. இந்த மாளிகையில் சில பகுதிகளை தவிர்த்துவிட்டு ட்ரம்ப் தனக்கென ஒரு பிரைவேட் குடியிருப்பை கொண்டுள்ளார். இங்கு இருந்துதான் இவர் இனி தனது பணிகளை கவனிப்பார் என பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com