அமெரிக்காவின் 47ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று (நவ.5) நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம் களம் கண்டனர். இதனால் போட்டி கடுமையாக இருந்தது. கருத்துக்கணிப்புகளில்கூட, கமலா ஹாரிஸே வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்றார். இதையடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலில் வெற்றிபெற்ற பின்பு ட்ரம்ப், “தற்போது தனக்கு கிடைத்துள்ள வெற்றி முன் எப்போதும் இல்லாத மிகப்பெரிய ஒன்று. இது போன்ற இயக்கத்தை இதற்குமுன் ஒரு போதும் யாரும் கண்டிருக்கமாட்டார்கள். ஒவ்வொரு குடிமகனுக்காகவும் அவர்களது குடும்பத்திற்காகவும் உழைப்பேன். அமெரிக்கர்கள் தங்கள் வாக்கின் மூலம் காட்டிய அன்பிற்கு உழைப்பு மூலம் நன்றியை தெரிவிப்போம். வலிமையான, மகிழ்ச்சியான, பாதுகாப்பான அமெரிக்காவை உருவாக்கும்வரை தான் ஓயப்போவதில்லை” எனச் சூளுரைத்துள்ளார்.
தொடர்ந்து அவர், “இனிவரும் காலம் அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். போரை தொடங்குவேன் என கூறினார்கள்; நான் போரை நிறுத்துவேன். போரை நடத்துவதைவிட நிறுத்துவதில்தான் ஜனநாயகமும், சுதந்திரமும் உள்ளது. ஆனால், அமெரிக்காவுக்கு வலிமையான ராணுவம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம். உலகத்தின் மிக முக்கிய பணி இது. அமெரிக்கா எதிர்கொள்ளும் எல்லைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.
அமெரிக்காவிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். என்னுடைய இந்த வெற்றியில் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பங்கு முக்கியமானது. அவர் ஒரு ஜீனியஸ். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம் பொறுப்பு. அவரைப் போலவே தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.