பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பான சிஐஏவின் விசாரணை அறிக்கை விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரை எழுதி வந்த எழுத்தாளர் கஷோகி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார். படுகொலை செய்வதற்கு முன், அவர் சித்ரவதை செய்யப்பட்ட ஆடியோக்களை துருக்கி அதிகாரிகள் அமெரிக்காவிடம் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கஷோகி படுகொலை குறித்து வெளியான ஆடியோ குறித்து தம்மிடம் சுருக்கமாக விளக்கப்பட்டதாகவும், அதே சமயம் அதை கேட்க வேண்டாம் என அறிவுறுத்தி இருந்ததால், ஆடியோவை கேட்கவில்லை என்றும் கூறினார்.
கஷோகி படுகொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக சிஐஏ முடிவு செய்திருந்தது குறித்து தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ட்ரம்ப், இது தொடர்பான முழு அறிக்கை விரைவில் கிடைக்கும் என்றும், அப்போதுதான் இறுதி முடிவுக்கு வர முடியும் என்றும் கூறினார். அதே சமயம் சிஐஏ முன்கூட்டியே தெரிவித்ததில் உண்மையும் இருக்கலாம் என ட்ரம்ப் தெரிவித்தார்.