பாகுபலிக்கு பதிலாக ட்ரம்பின் முகத்தை மார்பிங் செய்து ட்விட்டரில் வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நாளை இந்தியாவுக்கு வர இருக்கிறார். அவர் செல்லவிருக்கும் நகரங்கள் அனைத்தும், ட்ரம்பை வரவேற்கும் விதமாக விழாக்கோலம் பூண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ட்ரம்ப்பிற்கு வழங்க பல்வேறு தரப்பினரும் பரிசுப் பொருட்களை தயாரித்தும், அனுப்பியும் வருகின்றனர். அந்த வகையில், கோவை வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த தையல் கலைஞரான விஸ்வநாதன் என்பவர் பருத்தி துணியால் ஆன குர்தாவை ட்ரம்புக்கு பரிசாக அனுப்பி உள்ளார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ட்ரம்ப்பின் உருவங்களை அரிசியில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். நுண்கலை ஓவியம் படைப்பதில் பேரார்வம் கொண்ட இவர், இந்தியாவுக்கு வருகை தரும் ட்ரம்ப்புக்கு அதனை பரிசாக கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
இது இப்படி இருக்க இன்னும் சிலர் சமூக வலைதளங்களில் பிரத்யேக வீடியோக்கள் மூலம் ட்ரம்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாகுபலி படத்தில் வரும் காட்சியில், கதாநாயகனுக்கு பதிலாக ட்ரம்பின் முகத்தை மார்பிங் செய்து ட்விட்டரில் வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்திய நண்பர்களை காண எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.