அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். அதேநேரத்தில் ஜனநாயக கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்டவற்றால் கடும் விமர்சனத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவரே அதிபர் தேர்தலிலிருந்தே விலகினார். அத்துடன் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரீஸை ஜனநாயக கட்சி வேட்பாளராக வழிமொழிந்தார். அக்கட்சி சார்பில் அவர் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.
என்றாலும், அவருக்கு கட்சியிலேயே பலத்த ஆதரவு இருப்பதால், அவரே இந்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டின்போது வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ட்ரம்ப் - கமலா ஹாரீஸ் இடையே நடைபெறும் பிரசார மேடைகள் வேகமெடுத்து வருகின்றன. நாட்கள் நெருங்கநெருங்க கமலா ஹாரீஸுக்கு ஆதரவு பெருகுவதால் டொனால்டு ட்ரம்ப் அவரைப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பிரசார மேடைகளில் எடுத்துவைத்து வருகிறார். இது, அமெரிக்காவில் சர்ச்சை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ட்ரம்ப், ''கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். ஆனால், தற்போது தன்னை கறுப்பராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். அதனால், அவர் கறுப்பரா? அல்லது இந்தியரா? என்பது எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் நான் மதிக்கிறேன். ஆனால், அவர் வெளிப்படையாக இல்லை. அவர் தன்னை இந்தியர் என்றுதான் கூறினார். பின்னர் திடீரென கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்’’ எனக் கேள்வி எழுப்பினார்.
அதுபோல் கமலா ஹாரீஸின் கல்வித் தகுதி மீதும் அவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுகுறித்து அவர், “நான் உங்களுக்கு உண்மையை சொல்கிறேன். கமலா பார் (சட்டம்) தேர்வில் வெற்றி பெறவில்லை. அவர் வெற்றி பெறுவார் என்றும் நினைக்கவில்லை. ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை வெற்றி பெற்றிருக்கலாம்” எனப் பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ட்ரம்பின் இந்தக் கருத்துக்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், “ஒருவர் தன்னை எப்படி அடையாளம் காட்டுகிறார் என்பதை பற்றி பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது அவரது சொந்த முடிவு. கமலா ஹாரிஸ் மட்டுமே அவரது இனம் குறித்து பேச முடியும். அமெரிக்காவின் துணை அதிபருக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ட்ரம்பின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ், "பிளவுபடுத்தும், மரியாதையற்ற இந்த கருத்து ட்ரம்பின் நெடுநாள் செயலாகும். நம்முடைய வேறுபாடுகள் நம்மைப் பிரிக்காது என்பதை உணர்ந்துகொண்ட தலைவர்தான் நமக்கு தேவை" எனச் சாட்டையடி கொடுத்தார்.
கமலா ஹாரீஸின் பிறப்பு, கல்வி குறித்து டொனால்டு ட்ரம்ப் பேசியிருப்பது, அமெரிக்க தேர்தல் களத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆப்ரிக்க தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.