அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய ஆதரவு நிலைப்பாடு கொண்ட மைக் வால்ட்ஸை நியமிக்க ட்ரம்ப் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புளோரிடாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மைக் வால்ட்ஸ் தீவிர ட்ரம்ப் ஆதரவாளராக பார்க்கப்படுகிறார். பென்சில்வேனியாவில் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளுக்கான சபையில் கிழக்கு - மத்திய பகுதியில் இருந்து மைக் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் மைக் வால்ட்ஸ்.
ஆசிய - பசுபிக் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருபவர் மைக். சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறார்.
அதே சமயம், இவர் தலைமையிலான குழு அமைந்த பிறகுதான் அமெரிக்கா - இந்தியா இடையிலான பாதுகாப்பு தொடர்பான உறவில் சுமூகமான பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் இந்திய ஆதரவாளராக கருதப்படும் மைக் வால்ட்ஸுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நியமனம் இந்திய - அமெரிக்க உறவுகளை மேம்படுத்தும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்திய வம்சாவளி உறுப்பினரான ரோ கன்னா தெரிவித்துள்ளார்.