அமேசான் காடுகள் அழிப்பு தொடர்பான முதல்கட்ட புள்ளி விவரங்கள் வெளியாகி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'உலகின் நுரையீரல்' என்ற பெயருக்கு சொந்தமானது அமேசான் காடுகள். பூமிக்குத் தேவையான ஆக்ஸிஜனில் 20%-க்கும் மேல் அமேசான் காடுகளால் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 9 நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் அமேசான் காடுகளின் பெரும்பகுதி பிரேசிலில் உள்ளன. இப்படி இயற்கையின் கொடையான அமேசானுக்கு எதிராக மனிதர்கள் களம் இறங்கி உள்ளனர். அதுவும் இந்தக் கொரோனா காலத்தில் அவர்களின் அட்டூழியம் அதிகம்.
கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை கொரோனாவால் பீதியடைந்துள்ளன. உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி இருந்த இந்த காலகட்டத்தை பயன்படுத்தி இந்த அற்புதமிக்க அமேசான் காடுகளை அழித்துள்ளனர் சமூக விரோதிகள். இதனை பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பே கண்டுபிடித்துள்ளது.
''அமேசான் மழைக்காடுகள் ஆகஸ்ட் 2019 முதல் 2020 ஜூலை வரை மொத்தம் 11,088 சதுர கி.மீ (4,281 சதுர மைல்) அழிக்கப்பட்டன. இது முந்தைய ஆண்டைவிட 9.5% அதிகரிப்பு ஆகும். 12 ஆண்டுகளில் இல்லாத அளவுகள் இது. அழிக்கப்பட்ட காடுகளின் அளவானது லண்டன் மாநகரைப் போல் 7 மடங்கு இருக்கும்" என இன்பே தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நிமிடமும் ஒரு கால்பந்து ஆடுகளத்தின் அளவு காடுகளின் பகுதி அழிக்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. இந்தக் கொரோனா காலத்தில்தான் அதிகளவு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் புள்ளிவிவரங்கள் முதல்கட்டம்தான். இன்னும், அதிகாரபூர்வ முழுமையான புள்ளிவிவரங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட உள்ளன என்று இன்பே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள பிரேசிலிய சுற்றுச்சூழல் ஆர்வலர் கார்லோஸ் ரிட்ல், ''அழிக்கப்பட்ட காடுகளின் அளவு பெல்ஜியத்தின் மூன்றில் ஒரு பகுதியாகும். பிரம்மாண்டமான காடுகள் நாளுக்கு நாள் இழக்கப்படுகின்றன. ஏனெனில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ ஆட்சியில் காடழிப்பு செய்கிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சம் இல்லை" என்று கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்குமுன் பதவியேற்ற பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ தீவிர வலதுசாரி. அதிபர் ஆனபின் பொருளாதார நலனுக்காக மழைக்காடுகள் அழிவை தீவிரப்படுத்தி வருகிறார். வளர்ச்சிக்காக காடுகள் அழிக்கப்படுவது தவறல்ல என பலமுறை தன் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்த பிரேசில் அதிபர் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை இழந்தே உள்ளனர். 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவரது ஆட்சி காலத்தில் அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட்டில் அமேசானில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் அழிவின் விளிம்புக்கு சென்றது. அந்த சமயத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் காட்டுத் தீயை அணைக்க பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவ தயார் என்று தெரிவித்திருந்தார். ஆனால், பிரேசில் அதிபர் போல்சினோரா அமேசான் காடுகள் எரிகிறது என்பது பொய் எனக் கூறி அந்த உதவியை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்க வேட்டைக்காக சுரங்கங்கள் தோண்டப்படுவது, மரங்கள் வெட்டப்படுவது என இந்தக் காடழிப்பு தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், காடழிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.