நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம்தான் வேலை, வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும். 3 நாட்கள் விடுமுறை என பின்லாந்து பிரதமர் சாரா மரின் கூறியதாக வெளியான செய்தி குறித்து அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
பின்லாந்து நாட்டின் பிரதமராக 34 வயதான சன்னா மரின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக அளவில் மிகக்குறைந்த வயதில் பிரதமரான சாரா மரின், கடந்த வாரம் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வைரலானது.
அதில், "நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம்தான் வேலை. வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும். 3 நாட்கள் விடுமுறை" என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. தற்போது பின்லாந்து அரசே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் “பின்லாந்து பிரதமராக சன்னா மரின் வருவதற்கு முன், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனநாயகக் கட்சியின் ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக அவர் இருந்தார். அப்போது, நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் சாரா மரின் இந்த ஆலோசனையை முன் வைத்தார்.
அதாவது, ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 8 மணிநேரம் வேலை, வாரத்துக்கு 5 நாட்கள் வேலை என்ற கட்டத்திற்குள் இருப்பது. அதை மாற்ற வேண்டும். இது ஒன்றும் இறுதியானது இல்லையே. வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் வேலை, வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை என்று மாற்றியமைக்க வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தாருடன் கூடுதலாக 3 நாட்கள் செலவிட முடியும். இதுதான் வாழ்க்கைக்கான திட்டமிடலாக இருக்கும்’ என ஆலோசனை தெரிவித்தார்.
பிரதமரான பின் இதுபோன்ற ஆலோசனைகளை சன்னா மரின் வைக்கவில்லை. இந்தத் திட்டம் அவருடையது. பின்லாந்து அரசின் திட்டம் இல்லை. வாரத்துக்கு 4 நாட்கள் வேலை என்று கொண்டுவரும் எண்ணம் ஏதும் பின்லாந்து அரசுக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளது.