கொரோனா வைரஸை ஆயுதமாக பயன்படுத்துவது குறித்து 2015ஆம் ஆண்டிலேயே சீன ராணுவ விஞ்ஞானிகள் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2019-ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி தற்போது வரை அதன் தாக்கம் நீடிக்கிறது. உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
இந்தச் சூழலில், கொரோனா வைரஸை ஆயுதமாக பயன்படுத்தும் முறை பற்றி 2015-ஆம் ஆண்டிலேயே சீன ராணுவ விஞ்ஞானிகளும் அந்நாட்டு சுகாதாரத்துறையினரும் விவாதித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான ஆவணம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக THE AUSTRALIAN என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
3-ஆவது உலகப்போர் உயிரியல் ஆயுதங்களால் நிகழக்கூடும் என்றும், இதன்மூலம் எதிரி நாட்டின் மருத்துவத்துறையை செயலிழக்க செய்துவிட முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் விவாதித்ததாக ஆஸ்திரேலிய பத்திரிகை தெரிவிக்கின்றது.
கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக சீனா மீது ஏற்கெனவே உள்ள குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் தற்போது ஆவணம் ஒன்று வெளியாகியிருப்பது அந்நாட்டின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலேயே உள்ளது.